அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் கொடிப்பட்டம் மாடவீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் கொடி பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
பின்னர் நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், தொழிலதிபர்கள், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் மற்றும் மண்டகப்படிதாரர் சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனித் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை 4 மணியளவில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணிவிடை ஸ்ரீபலிநாதர் அஸ்திரத்தேவர் திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா வந்தனர். திருவிழாவின் முக்கிய திருநாளான தேரோட்டம் இம்மாதம் 13-ம் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடைபெறும். 14-ம் தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை, யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதீயுலா நடைபெறுகிறது. 15-ம் தேதி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெறும்
No comments:
Post a Comment