செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, October 31, 2012

ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா 2012

ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா 



"செண்பகவல்லியே சரணம் - கோயில் 
பட்டியில் வாழ்வருள் சக்தியே சரணம் 
பொன்மலைச் செல்வியே சரணம் - எழில் 
பூவன நாதரின் தேவியே  சரணம்"

                       திருமங்கைநகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி, என்றெல்லாம் சிறப்பித்து  கூறப்படும் கோவிற் பட்டி திருத்தலம் தூத்தக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க திருதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை செண்பகவல்லி பூவனநாதருடன் அருளாட்சி செய்கின்றாள். இங்கு அன்னை செண்பகவல்லியின் அருள், காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு, அன்னையின் பொற்பதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது  

கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்பாள் சந்நிதி நுழைவாயில்

அம்பாள் சந்நிதி கொடிமரம் 

அம்பாள் சந்நிதி கொடிமரம் 


கோபுரமும் கொடிமரமும் 

கோபுரமும் கொடிமரமும் 

    அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

   காலை 5 மணிக்கு கொடிப் பட்டமானது மாட வீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் நந்தி, பலிபீடம் மற்றும் கொடி மரம் ஆகியவற்றுக்கு 18 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.    கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள், முன்னாள் திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, ஜனக்கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

   ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ம் திருநாளான நவம்பர் 7-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்பாள் திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாணமும் நடைபெறும்.    பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும்.

Friday, October 19, 2012

நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி

நலங்கள் அள்ளி தரும் நவராத்திரி





 



          சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. 'நவம்' என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. 'நவ நவமாய் பெருகும்' என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நா
டு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை 'விஜயதசமி' என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம். பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம். அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறைவன் அம்சம் உளளது என்பதை உணர வைப்பதற்காகவும், நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று எல்லா துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடுவார்கள். நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி என கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் ஞானம், வித்தை, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் வந்து சேரும். இந்நாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் விருத்தியடைய வழிபடுவது மிகவும் உகந்ததாகும். நவராத்திரி என்பது நமது பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விழாவாக தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முக்கியமாக பெண்களை முன்நிறுத்தி கொண்டாடப்படும் பண்டிகையாகும். சக்தி தேவியான அம்பாளை பிரார்த்தித்து அவள் அருள் வேண்டி ஒன்பது ராத்திரிகள் விரதம் இருந்து வணங்குவதே இதன் சிறப்பு. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி (இச்சை என்றால் விருப்பம், ஞானம் என்றால் அறிவு, கிரியா என்றால் செய்தல்) என்ற முப்பெரும் தேவிகளை வணங்குவதே நவராத்திரியின் சிறப்பாகும். இதற்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர் உண்டு. குமரி பூஜை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்றாகும். 2 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பல்வேறு விதமான வேடங்கள் அணிவித்து, அந்த அம்பாளாகவே பாவித்து பூஜிக்க வேண்டும். பல்வேறு சக்தி அம்சங்கள் இருந்தாலும், மிக முக்கிய அம்சங்களான குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்கா, சுபத்திரா வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி, மகேஸ்வரி, கவுமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்மி சாமுண்டி என்று இந்த நாமாக்களை சொல்லி ஒவ்வொரு இரவும் பூஜிக்க வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப குடும்ப வழக்கப்படி 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் கொலு படிகள் அமைத்து அதில் கடவுள் அவதார சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவை, மிருகங்கள், காய்கறி, பழவகைகள் போன்ற பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடலாம். மேல் படியின் நடுவில் ஒரு கும்பம் வைத்து அதில் அரிசி, பருப்பு போட்டு மாவிலை சொருகி, அதன் மீது தேங்காய் வைக்கலாம். அதன் முன்பு முப்பெருந்தேவியரான சக்தி, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளை வைக்க வேண்டும். அடுத்தடுத்த படிகளில் சாமி சிலைகள், இறைவனின் மற்ற அவதாரங்கள், தட்சிணாமூர்த்தி போன்றவற்றையும், பின்னர் சாய்பாபா, ஆதிசங்கரர் போன்ற மகான்களின் சிலைகள், பிறகு மனிதர்கள், அதன் கீழே விலங்குகள், பூச்சிகள், அதற்கும் கீழே காய்கறி, பழ வகைகள், பாத்திரங்கள் போன்ற பொம்மைகளை வைக்கலாம். உயிரற்ற பொருட்களும் குறைந்த அறிவுள்ள பொருட்களும் கீழ் நிலையில் இருக்கின்றன. படிப்படியாக ஞானம் பெற்றால் உயர்நிலையை அடையலாம் என்பது இதன் தாத்பர்யம். மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும். அவரவர் வசதிப்படி பொங்கல், சுண்டல் ஆகியவற்றை நிவேதனம் செய்யலாம். இசை என்பது பக்தியின் ஒரு வடிவம். கல் நெஞ்சையும் உருக வைக்கும் மகத்துவம் இசைக்கு உண்டு. பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. ஸ்லோகங்கள் சொல்லலாம். தினமும் நடுவாசலிலும் கோலம் போட்டு, அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைத்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்ளலாம். நிவேதனம் செய்த பொங்கல், சுண்டல் போன்றவற்றுடன் ஜாக்கெட் பிட், பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், தேங்காய், பரிசு பொருட்கள் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம். ஆடம்பரமாகத்தான் கொலு வைக்க வேண்டும் என்றில்லை. அவரவர் வசதிப்படி ஒரு படி வைத்து நாலைந்து பொம்மைகளை வைத்தால்கூட அது கொலுதான். முப்பெருந்தேவியரை நம் வீட்டில் எழுந்தருளச் செய்து 9 நாட்களும் வழிபட வேண்டும் என்பதே முக்கியம். ஒரேயடியாக எல்லா பொம்மைகளையும் வாங்குவது என்பது பலருக்கு சிரமமாக தெரியும். ஒவ்வொரு ஆண்டும் சில பொம்மைகள் வாங்கி கொலு வைக்க தொடங்கி, ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி அடைவது போல நம் வாழ்க்கையிலும் வளம் பெருகும். 'ஜோதிட முரசு' மிதுனம் செல்வம் நவராத்திரி விரதம் நவராத்திரி ஆரம்பம்: 16-10-12 செவ்வாய் பத்ரகாளி அஷ்டமி: 22-10-12 திங்கள் சரஸ்வதி, ஆயுத பூஜை: 23-10-12 செவ்வாய் ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்: காலை: 10.30-11.00, பகல் 12.00-1.00 மாலை: 4.30-6.00, இரவு 7.00-8.00 விஜயதசமி: 24-10-12 புதன்

Tuesday, September 18, 2012

தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய

தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும்
63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது. இன்னும் நிறைய உள்ளன , சென்று உலாவுங்களேன். நன்றி

Wednesday, September 12, 2012

தீபம் ஏற்றும் முறையும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்



முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும்
2வது வடக்கு நோக்கி ஒரு திரியும்
3வது மேற்கு நோக்கிஇரு திரியும் ஏற்ற வேண்டும்.தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.

குளிர்விக்கும் போது,
முதலில் மேற்கே உள்ள திரிகளையும்
2வது வடக்கே உள்ள திரியையும்
3வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.ஊதி அணைக்கக் கூடாது.அப்படி அணைப்பது சாவுச் சடங்கிற்குச் சமமானது.(நாம் பிறந்த நாள் விழாக்களில் என்ன செய்கிறோம்? என்பதை இப்போது நினைவு கூரவும்.அது மிகவும் தவறான அணுகுமுறை)

மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள
வாஸ்து குற்றங்களை சரி செய்யும்.குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும்.
எனது அனுபவத்தில் பிரிந்தவர்கள்- ஒரு போதும் சேரவே வாய்ப்பு இல்லை என நம்பியிருந்தேன்.அவர்கள் இந்த பரிகாரத்தால் ஒன்றிணைந்தனர்.ஆமாம்!!!பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்ந்தனர்.
தீபம் ஏற்றுங்கள்!!! வளமுடன் வாழுங்கள்!!!

Tuesday, September 4, 2012

சங்கடங்கள் நீக்கிடும் சங்கடஹர சதுர்த்தி விரதம்

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம்.
 
சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். 'ஹர' என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
 
அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர்.
 
விரதத்தின் பலன்கள்:
 
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும்.
 
சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
 
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.
 
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, 'ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்' எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

Wednesday, August 22, 2012

தூங்கும் போது எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்?







தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள்.

கெட்ட கனவு வருகிறதா :-
சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது.

ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்
வைணதேயம் விருகோதரம் சயனே,
யஸ் ஸ்மரேன் நித்யம்
துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி.

தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது.

மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக்கொண்டு படுக்கக்கூடாது. இதனால் இவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புற படுக்கக்கூடாது. அதுபோல் கால்களை தவளைபோல் வைத்துக்கொண்டு தூங்கக்கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

இதனால் வலப்பக்கம் உள்ள சூரிய நாடியில் எட்டு அங்குலம் வரை சுவாசம் செல்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். மேலும் சூரிய நாடியில் வரும் வெப்பக்காற்று பித்த நீரை அதிகம் சுரக்கச்செய்து உண்ட உணவுகளை எளிதில் சீரணமாக்கும் .

இடது பக்கம் ஒருக்களித்துப் படுப்பவர்களின் இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைப்பதால் இரத்த ஓட்டமும் அதிகம் செல்லும். இதனால் இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்துப் படுப்பதால் சந்திர நாடியாகிய இடப்பக்க மூக்கின் வழியே சுவாசம் 15 அங்குலம் வரை செல்லும். இதனால் உடல் வெப்பத்திற்குப் பதில் குளிர்ச்சியே ஏற்படும். சீதளம் உண்டாகும். இரவு உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப்போய் விஷமாக மாற நேரிடும்.

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு

ஓங்குயிர் தெற்கு

மத்திமம் மேற்கு

மரணம் வடக்கு

கிழக்குத் திசையில் தலை வைத்துப் படுப்பதே நல்லது என்கின்றனர் சித்தர்கள். ஆனால் நீண்ட ஆயுளைப் பெற தெற்குத் திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது. மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பதால் கனவுகள், அதிர்ச்சி போன்றவை உண்டாகும்.

வடக்கு திசையில் ஒருபோதும் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இதனை விஞ்ஞான ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளனர். வடதிசையிலிருந்து வரும் காந்த சக்தி நம் தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும் இதனால் மூளை, பாதிக்கப்படுவதுடன் இதயக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள் ஏற்படும்.

Monday, April 16, 2012

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவில் 10வது நாளன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. புத்தாண்டு அன்று இந்த விழா நடைபெற்றதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து வழிபட்டனர். தீர்த்தவாரி விழாவை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பின்னர் இரவு 12 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷப வாகன வீதி உலா நடந்தது.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

 

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. விழாவின் 8ம் திருநாளான நேற்று மாலை கம்மவார் சங்கம் சார்பில் 37-வது ஆண்டு தேர்த்திருவிழா நடந்தது. 

இதையொட்டி காலை 4 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 5 மணிக்கு ரதா ரோகண பூஜையும் நடந்தது. கம்மவார் சங்க தலைவர் ஆர்.வி.எஸ்.துரைராஜ் தலைமையில், எம்எல்ஏ  கடம்பூர் ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சனம், உதவி ஆணையாளர் வீரராஜன், கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மூப்பன்பட்டி பொன்னுச்சாமி தலைமையில் தேர்த்தடி முறையதாரர்கள் தேர்த்தடி போட்டனர். முதல் தேரில் பூவனநாதசுவாமி பிரியாவிடையுடன் பவனி வந்தார். 2-வது தேரில் செண்பகவல்லி அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

 

Wednesday, April 4, 2012

சித்திரை தீர்த்த திருவிழா கொடியேற்றம்

செண்பகவல்லி அம்மன் கோவில் சித்திரை தீர்த்த திருவிழா 



         நம் திருக்கோவில் சித்திரை தீர்த்த திருவிழா கொடியேற்றம்   இன்று (04 /04 /2012 ) காலை 6 .30  மணியளவில் நடைபெற்றது. தினமும் காலையும், மாலையும் சுவாமி அம்பாள் திருவிதி உலாவும், அதனை தொடர்ந்து வருகிற வியாழக்கிழமை தேரோட்ட  திருவிழாவும், வெள்ளிகிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெற உள்ளது.
















Saturday, March 17, 2012

திருக்கோயில் வழிபாட்டு விதிகள்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்கிறார் செந்தமிழ் முதுபெரும் மூதாட்டி ஔவையார்.

"திருக்கோயில் இல்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக் கோடிப் பத்திமையாற் பாடாவூரும்
பாங்கினொடு பல தளிகளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே"

என்று திருக்கோயில் இல்லாத ஊரை அடவி காடு என குறிப்பிடுகிற அப்பர் பெருமான் "ஒருக்காலும் திருக்கோயில் சூழாராகில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் ராரே" என்று வருந்துகின்றார்.
இவை ஆலய வழிபாடு ஆன்மா இறைவன்பால் லயப்படுவதற்கு அவசியம் என்பதால் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என அப்பரடிகள் வலியுறுத்துவதை உணரலாம்.



ஆ- பசு எனப் பொருள்படும்.பசு என்றால் ஆன்மா. ஆன்மா லயப்படும் இடம் என்பதே ஆலயத்தின் பொருளாகும். கோ என்றால் அரசன். இல் என்றால் இருக்கும் இடம்.எனவே கோயில் என்பது பசுக்களின்(ஆன்மாகளின்) பதியாகிய இறைவன் சிவப்பரம்பொருள் எழுந்தருளியிருக்கும் இடம் என பொருள்படும்.
கற்பனைக் கடந்த சோதியாகிய சிவப்பரம்பொருள் ஆன்மாக்களை ஈடேற்றும் கருணையின் நிமித்தம் அற்புதக் கோலந்தாங்கி எழுந்தருளியுள்ள திருக்கோயிலுக்கு சைவ சமயிகள் யாவரும் நாள்தோறும் சென்று விதிப்படி பயபக்தியுடன் வழிபடுதல் வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஆலயம் செல்ல இயலாதவர்கள் சோமாவாரம் , மங்கலவாரம், சுக்கிரவாரம்,பிரதோசம்,பௌர்ணமி,அமாவாசை,திருவாதிரை,கார்த்திகை,மாதப்பிறப்பு,சூரியகிரகணம்,சிவராத்திரி,நவராத்திரி,விநாயசதுர்த்தி,விநாயகசட்டி,கந்த சட்டி,போன்ற விசேடநாள்களில் தவறாது செல்லுதல் வேண்டும்.
திருக்கோயில் கோபுரம் தூலலிங்கம் எனப்படும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர்.
ஆதலால் திருக்கோயில் கோபுரத்தை கண்டதும் கைகூப்பித் தொழுது திருக்கோயிலுக்கு அருகில் உள்ள புண்ணியதீர்த்தத்தில் நீராடி தோய்த்துலர்ந்த ஆடைதரித்து (ஈர ஆடையுடன் ஆலயம் செல்லல் தவறு) பரிசுத்தமாக கோயிலுக்கு செல்லல் வேண்டும்.
ஆலய புண்ணிய தீர்த்தத்தில் குளிக்க முடியாதவர்கள் இல்லத்தில் நித்திய கருமங்களை முடித்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடையணிந்து ஆலயத்துக்கு வரவேண்டும். வரும்போது இயலுமானவரை அந்நியமான எவருடனும் முட்டாது அவர்களைத் தீண்டாது வரவேண்டும்.(அறிமுகம் இல்லாதவர் மரணவீட்டிற்குச் சென்றுவிட்டும் வரலாம்.எனவேதான் எவரும் தீண்டாதவண்ணம் இயன்றவரை வரவேண்டும்.) ஆலயம் வந்ததும் கேணியில் கால்களை கழுவுதல் வேண்டும்.

தேங்காய்,பழம்,பாக்கு,வெற்றிலை,கற்பூரம்,மலர்கள்,மாலை முதலியனவற்றை தட்டில் அல்லது பாத்திரத்தில் வைத்து அரைக்குக் கீழ்ப்படாது மேலே உயர்த்தப்பட்ட கையில் ஏந்திக் கொண்டு போதல் அவசியம்.
நாம் யாரேனும் பெரியவர் வீட்டுக்கோ அல்லது தெரிந்தவர் வீட்டுக்கோ செல்லும்போது ஏதேனும் அவர்களுக்கு கொண்டுசெல்வதை மரியாதையாக கருதுகிறோம். ஐந்தொழில்களையும் புரிகின்ற இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு செல்லும்போது அன்பு என்ற ஒன்றே உண்மையில் போதுமானது.ஆனால்?
ஏதேனும் இறைவனுக்கு செய்யப்படும் பூசைக்கு உதவக்கூடிய பொருட்களில் ஒன்றையேனும் கொண்டுசெல்லாவிட்டால் அந்த அன்புக்கு மரியாதையை நாம் செய்யவில்லை என்றே அர்த்தமாகிறது.

கோயிலுக்குள் நுழைந்ததும் துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தின் அருகில் நிலத்தில் விழுந்து ஆண்கள் அட்டாங்கமாகவும் பெண்கள் பஞ்சாங்கமாகவும் வணங்க வேண்டும்.
அட்டாங்க வணக்கம்:- தலை,கையிரண்டு,செவியிரண்டு,மேவாய்,புயங்களிரண்டு என்னும் எட்டு அங்கங்களும் நிலத்தில் தோயும்படி வணங்குதல் வேண்டும்.
பஞ்சாங்க வணக்கம்:-தலை,கையிரண்டு,முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அங்கங்கள் நிலத்தில் தோயும்படி வழிபடல் வேண்டும்.
திரயாங்க வணக்கம்:-சிரசிலே இரண்டு கைகளையுங் குவித்தல்
இவ்வணக்கமுறையை ஒரு தரம் இரண்டு தரம் பண்ணுதல் கூடாது. மூன்று தரம், ஐந்துதரம்,ஏழுதரம்,பன்னிரண்டு தரம் என பண்ணுதல் வேண்டும்.
விழுந்து வணங்கும்போது கிழக்கேயாயினும் வடக்கேயாயினும் தலைவைத்து வழிபடல் வேண்டும். நிலத்தில் விழுந்து வணங்க முடியாதவர்கள் (முதியவர்கள்,முழங்கால் என்பு இழையம், முழங்கால் மென்சவ்வு இழையம் தேய்வடையும் குறையுடையவர்கள்) திரியங்க வணங்கத்தை மேற்கொள்வதில் தவறில்லை.
பின்னர் பலிபீடத்தில் பாசங்களை பலியிட்டு பின் நந்திதேவரிடம் நின்று வணங்கி அவர் அனுமதி பெற்று துவாரபாலகர்களை வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
"நந்தியெம்பெருமானே, பிறவா யாக்கைப் பெரியோனும் தனக்குவமை இல்லாதவனும் எல்லாம் வல்லவரும் முழுமுதற்பொருளுமாகிய சிவபெருமானை வழிபட அனுமதி வேண்டுகிறேன்.இறைவனின் திருவருள் கிட்ட அருள்பாலியும் ஐயனே" என்று வேண்டலாம்.



பிறகு ஆலய விநாயகர் சன்னிதியில் (வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது விதி) நின்று வழிபட்டு குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டு பின்னர் திருமூலட்டானத்தினை நோக்கி செல்ல வேண்டும். அதனையே கருவறை, மூலத்தானம் எனவும் அழைப்பர்.
மூலத்தானத்தில் உள்ள முழுமுதற் பொருளாகிய சிவலிங்கத் திருமேனியை அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும் அருமருந்தை;
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.

மண்டையோட்டுத் தலைகளால் ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
என திருமுறைகளை ஓதி மனமுருகி வழிபடல் வேண்டும்
பின் அந்தணரிடம் இருந்து திருநீறு பெற்று சிவ சிவ என உச்சரித்தவண்ணம் பூசுதல் வேண்டும். பின் வலம் வருதல் வேண்டும்.


தெற்குப் பாகத்தில் தென்முகக் கடவுளை வழிபடுதல் வேண்டும். கல்லாலின் புடையமர்ந்து நான்கு மறை ஆறு அங்கம் முதலியவற்றைக் கேள்வி வல்லவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் வாக்கியலைக் கடந்த நிறைவாயும் வேதங்கட்கு அப்பாற் பட்டதாயும் எல்லாமாயும் அல்லது மாயும் உள்ளத்தின் உண்மையை உள்ளபடி காண்பித்துக் குறிப்பால் உணர்த்திய தட்சிணா மூர்த்தி சந்நிதியின் முன்நின்று பாடலோதி வணங்குதல் வேண்டும்.
பின் தென்மேற்கு மூலையில் விநாயர் இருப்பர். அவரை வணங்கி பின் அடுத்தடுத்தாற்போல் உள்ள ஆலய மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.

மூலதானத்திற்கு நேர் பின்புறம் முருகன் அல்லது திருமால் இருப்பது மரபு. திருமால் இருப்பின் வடமேற்கு மூலையில் முருகன் இருப்பது மரபாகும். சில கோயில்களில் பின்புறம் முருகனும் வடமேற்கு மூலையில் கஜலட்சுமியும் இருப்பது மரபாகும்.

தெற்கு நோக்கி ஒவ்வொரு திருக்கோயிலிலும் நடராசப் பெருமான் எழுந்தருளியிருப்பர்.சைவ சமயத் தத்துவங்களைத் தாங்கிநிற்கும் திருவுருவம் நடராசப் பெருமான்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண் நீறும் இனித்தமுடைய எடுத்தபொற் பாதமுமாய் எழுந்தருளி ஐந்தொழில்களையும் ஆட்டுவிக்கும் நடராசப் பெருமானின் முன்நின்று திருமுறைகளை ஓதி வழிபடல் வேண்டும்.
அம்மன் திருக்கோயில் பெரும்பாலும் தெற்குநோக்கியே அமைந்திருக்கும். சில கோயில்களில் மூலத்தானைத்தை அடுத்து இடப்பக்கமாக தனிக்கோயிலாக அமைந்திருக்கும். தனம் தருபவருளும் கல்வி தருபவளும் ஒருநாளும் தளர்வறியா மனம் தருபவளும் தெய்வ வடிவம் தருபவளும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தருபவளும் நல்லன என்ன என்ன உண்டோ அவையாவையும் அள்ளித் தருபவளும் அன்பர்களுக்கு எல்லாப் பெருமைகளையும் தருபவளுமாகிய நறுமணப் பூவினைச் சூடியுள்ள கூந்தலையுடைய அம்மையை வழிபடல் வேண்டும்.

பின் துர்க்கையை வழிபட்டு சண்டிகேசரை வழிபடல் வேண்டும். "பெருமானே,அடியேனுக்கு கிட்டிய திருவருட்சம்மதத்தால் திருக்கோயிலை வழிபடும் பேறு பெற்றேன்.வழிபாட்டில் அபுத்தி பூர்வமாக ஏதேனும் தவறிழைத்திருந்தால் அவற்றைப் மன்னித்து அருள வேண்டும்' எனப் பிரார்த்திக்க வேண்டும்.சண்டிகேசரை வழிபடும்போது கையை மெதுவாகத்தட்டுவது மரபு.
உரக்கத்தட்டுதலைத் தவிர்க்க. சண்டிகேசர் நிட்டையில் இருப்பதால் நமது வரவை தெரிவிக்கவெ இவ்வாறு மெதுவாக கைதட்டுவது மரபு. சண்டேசுவரர் எழுந்தருளியுள்ள பிரகாரத்தை வலம் வருதல்,வீபூதி, குங்குமம் சண்டேசுவரர்மேல் எறிதல்,நூல் கழட்டி வைத்தல்,சுண்டுதல் என்பன பெருந்தவறாகும்.(தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டிகேசர் பிரகாரத்துள் நுழைந்து சண்டிகேசரைத் தீண்டி வணங்குவது கண்டு "தவறு' என எடுத்துக் கூறியபோது "இவ்வாலயத்தில்" இது சரி என அன்பர் வாதிட்டார். பின்னர் அங்குள்ள அந்தணரிடம் விசாரித்தபோது "பிழை" என்று சொன்னவர் மக்களின் தவறான நம்பிக்கையின் விளைவால் ஏற்பட்டது என்று வருந்தினார்.



பின்னர் பைரவர் சந்நிதியை வழிபட்டு விடைபெற்றுச் செல்லல் வேண்டும். பைரவர் திருக்கோயில் காவல் தெய்வமாகும்.
பின் புறங்காட்டாது பலிபீடத்திற்கு இப்பால் வந்து இடபதேவருடைய கொம்புகளினூடாக சிவலிங்கப் பெருமானை வழிபட்டு விழுந்து வணங்கி வடக்கு முகமாக அமர்ந்து சிவபெருமானை மனதில் எழுந்தருளச் செய்து திருவைந்தெழுத்தை உச்சாடனம் செய்து திருமுறைகளை ஓதி வழிபடல் நன்று.

"தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே"

என்று அம்மையினுந் துணை ஐந்தெழுத்தே என இறைவியிடம் ஞானப்பால் பெற்று அருந்திய திருஞானசம்பந்தர் எமக்கு விளக்கியுள்ளார். சித்தர் வாக்கு சிவன் வாக்கு என்பர்."சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புவதற்கு உண்மையான அட்சரம்
கபாடமற்ற வாயிலைக் கடந்துபோன வாயுவை
உபாயமிட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே"

என்று ஐந்தெழுத்தே மரணத்தின் பின் உபாயம் என்கிறார் சித்தர் சிவவாக்கியார்.
உருக்கழிக்கு முன்னமே உரையுணர்ந்து கொள்ளுமே என்று ஐந்தெழுத்தை உணரும்படி வேண்டுகிறார். எனவே ஐந்தெழுத்தை; நம சிவாய என்னும் தூல பஞ்சாட்சரத்தை 'ஓம்" என்னும் பிரணவம் சேர்த்து செபித்தல் வேண்டும்.



சிவாலயங்களை மூன்றுமுறை வலம்வருதல் விதி. எனவே பின்வருமாறும் ஆலய வழிபாடு மேற்கொள்ளப்படும்.
முதல் வலமாக கொடிமரத்தின் கீழ் விழுந்து வணங்கிய பின் வெளிப் பிரகாரத்தை சுற்றுதல்.
பின் திருமூலட்டானத்தை வழிபட்டபின் அம்மையை வழிபட்டு வலம் வருதல். இவ் இரண்டாம் வலத்தின்போது உற்சவமூர்த்திகள், நடராசப் பெருமான் ஆகியோரை வழிபட்டு சமயகுரவர்,சந்தான குரவர், அறுபத்து மூவர்,சேக்கிழார் ஆகியோரை வழிபட்டு முருகப் பெருமானை வழிபடல் வேண்டும் என்பர்.
மூன்றாம் சுற்றில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, பின் துர்க்கையை வழிபடல் வேண்டும்.கடைசியாக சண்டேசுவரரை வழிபடல் வேண்டும். ஒவ்வொரு சுற்றுப் பூர்த்தியிலும் பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணங்குதல் வேண்டும்.



திரும்பும்பொழுது ஆலயத்தின் வாயிலில் சற்று அமர்ந்து பின் எழுந்து செல்லல் வேண்டும். சிவாலயங்களில் ஏழு சிரஞ்சீவிகள் தங்கியிருந்து சிவதரிசனம் செய்பவர்களை அவர்கள் வீடுவரை வந்து மரியாதை செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே அவர்களை "நீங்கள் இருங்கள்,நாங்கள் சென்று வருகிறோன்" என்னும் பொருளிலேயே இவ்வாறு ஆலய வாயிலில் அமர்ந்து எழுந்து செல்லல் மரபு.
கரும்பைவிட மிக்கசுவை உடையவனாய், சூரியன் போன்ற ஒளி உடையவனாய், கடலில் தோன்றிய அமுதம் போல்பவ னாய், பிறப்பு, இறப்பு இல்லாதவனாய், மகா வாக்கியப் பொருளாய் இருப்பவனாய் உள்ள, பெரிய தவத்தை உடைய முனிவர்கள் துதிக்கும் அரிய பொன் போன்ற பெருமானை மனம்,மொழி,மெய்யினால் வழிபட்டு ஆலய வழிபாட்டை இறைசிந்தையுடன் பூரணப்படுத்தல் வேண்டும்.

திருக்கோயிலில் நுழைந்தது முதற் வெளியேறும்வரை இறைவனைத் தவிர வேறுயாரையும் கைகூப்பியோ அன்று விழுந்து வணங்கியோ அன்றி சாதரணமாகவோ வணங்குதல்/கும்பிடுதல் கூடாது. இறைவனுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் இது என்பதை நினைவில் கொள்க. எவரும் யாருடைய வணக்கத்தையும் ஏற்றலும் கூடாது.
அந்தணரை வணங்குதல், கும்பிடுதல் அறியாமையால் இன்று நிகழ்வதுண்டு. இது தவறாகும்.
இறைவன் சம்பந்தப்பட்ட வேறு பேச்சுக்களை பேசக்கூடாது.

பொதுவாக அனைத்து ஆலயங்களிலும் எழுந்தருளியுள்ள மூர்த்தங்கள்
நடராசர் :- படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிகளையும் செய்யும் கடவுள் அம்பலவாணர் திருவுருவம்.

உமாதேவி:- சிவபெருமானுடைய திருவருட்சக்தி. ஐந்தொழில்களுக்கும் துணையாகவுள்ள சிவசக்தி.உமாமகேசுவரராகிய சிவனே அம்மை வடிவங்களை வழிபடும் அன்பருக்கு அருள்பாலிப்பவர் என்பதை "உடையாள் நடுவுள் நீயிருத்தி" என்னும் திருவாசகம் மூலம் அறியலாம்.
சந்திரசேகரர்:- உமாதேவியை இடப்பாகத்தே கொண்ட போகவடிவம். சடையில் ஒற்றைப்பிறை விளங்கும்.
சோமஸ்கந்தர்:- சர்வலோகங்களையும் தேராய் அமைத்து ஆரோகணித்து முப்புரங்களையும் எரிக்கப்புறப்பட்ட கோலம்.
தட்சணாமூர்த்தி:- குரு வடிவம் கல்லால மரத்தின்கீழ் ஞானகுருவாக எழுந்தருளிய சிவபிரான் வடிவம். பிட்சாடனர்:- ஆன்மாக்கள் செய்யும் செப,தப அனுட்டானங்களை ஏற்கும் திருவடிவம்.

மேலும் திருக்கோயில்களில் விநாயகர்,பைரவர்,வீரபத்திரர்,முருகன் என்னும் நான்கு சிவகுமாரர்களின் திருவுருவங்களும் இருக்கும். சிவகுமாரர் நால்வரும் இறைவனின் சுத்த மாயா தத்துவத்திற்க் கொண்ட வடிவங்களாகும்.

விநாயகர்:- ஓங்காரத்தின்/பிரணவத்தின் உண்மைப்பொருளை அறிவிக்கும் சிவத்தின் வடிவம்.
பைரவர்:- சங்கர ருத்திரர் எனப்படுவர். சகல சம்பந்தங்களையும் சங்கரித்து ஆன்மாக்களை ஈடேற்றும் கோலம். சிவத்தினின்று தோன்றிய காரணத்தால் சிவகுமாரர் எனப்படுவர்.
இவரது வாகனம் வேதவடிவாகிய நாய் . இவரை வழிபடும்போது 'எங்களுடைய அகந்தையை நீக்கி காத்தருள வேண்டும்' என பிரார்த்தித்தல் வேண்டும்.
முருகன்:-இச்சா சக்தியாக வள்ளியம்மையையும் கிரியா சக்தியாக தெய்வானை அம்மையையும் உடையவர். மயிலாகிய வாகனம் ஆணவத்தையும் கொடியாகிய கோழி சிவ ஞானத்தையும் குறிக்கும்.
மேலும் ஆலயத்தில்;
பள்ளியறை:- காலையில் பள்ளியறைத் திறப்பு சிவமும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல் சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பனவாகும்.
கருவறை:- ஆலயத்தின் மையப்பகுதி. உடலில் இதயத்துள் இறைவன் இருப்பதற்குரிய அடையாளமாக விளங்குகிறது.
பலிபீடம்:- இது பாசத்தைக் குறிக்கிறது. இதை சிரி பலிநாதர் என்பர்.ஆலயத்துள் எட்டுத் திக்குகளில் எட்டுப் பலிபீடங்கள் இருக்கும். இவை எட்டுத்திக்குப் பாலர்களை உணர்த்தும். இவைகளுக்கெல்லாம் தலைமைப் பீடமாக உள்ளது நந்தியெம்பெருமானின் பின்பு உள்ள பலிபீடமாகும்.
நாம் வெளி எண்ணங்களை எல்லாம் பலியிட்டுவிட்டு இறைவனை வழிபட செல்லவே பலிபீடம் அமைந்துள்ளது.
கொடிமரம்:- அசுரர்களை அகற்றவும் சிவகணங்களையும் தேவர்களையும் பாதுகாக்கவும் கொடிமரம் அமைந்துள்ளது.
நந்தியெம்பெருமான்:- சிவபெருமானை எந்நேரமும் வணங்கி பார்த்தபடி இருக்கும் நந்தியெம்பெருமான் "நான் மறந்தாலும் என் நா மறவாது ஓது நாமம் நமசிவாயவே" என்பதுபோல் கண்காள் காண்மிங்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை" என்று அப்பர் பெருமான் ஏங்கியதுபோல் இடைவிடாது இறைசிந்தையில் இருத்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும்.

மண்டபங்களின் தத்துவம்
திருமூலட்டானம்:- மூலாதாரம்
அர்த்தமண்டபம்:-சுவாதிட்டானம்
மகாமண்டபம்:-மணிபூரகம்
ஸ்நான மண்டபம்:- அநாகதம்
அலங்கார மண்டபம்:-விசுத்தி
சபாமண்டபம்:-ஆக்ஞை

பலிபீடத்திற்கு அப்பால் விழுந்து வணக்க வேண்டும். கோயிலில் வேறு எங்கும் எச்சந்நிதியிலும் விழுந்து வணங்கக்கூடாது.
சமய சின்னங்கள் இன்றி ஆலயம் செல்லல் ஆகாது.
இறைவனுக்கு சாத்தப்பட்ட திருநீறு,வில்வம்,மலர் போன்றவற்றை மிதித்தல் ஆகாது.
ஒரே ஒருமுறை பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
தனித்தனியாக ஒவ்வொரு பிரகாரத்தையும் வலம் வருதல் கூடாது.
கோயிலில் படுத்து உறங்குதல் கூடாது.
சந்தியா வேளையில் உணவோ வேறு தின்பண்டமோ உண்ணல் ஆகாது.(சந்தியா வேளை மாலை 5.31 முதல் 7.30 மணிவரை.)
இரைந்துசிரித்தல் ஆகாது.
ஒருவர் காலில் மற்றவர் விழுந்து வணங்குதல் கூடாது.
கம்பளி ஆடை தரித்து கோயிலுக்குள் நுழையக்கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணுதல் கூடாது.
தாம்பூலம் தரித்தல் கூடாது.
தலைமுடி ஆற்றுதல் கூடாது.
ஆராதனைக்குரிய பொருள் இன்றி ஆலயம் செல்லல் தவறு.
கோயிலில் வேகமாக வலம் வருதல் கூடாது. கர்ப்பிணிப் பெண் மெதுவாக நடப்பதுபோல் வலம்வருதல் வேண்டும்.
ஆண்கள் சட்டையணிந்து கொண்டோ போர்த்துக் கொண்டோ ஆலயம் செல்லல் தவறு. மேல் வேட்டியை(சால்வையை) இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லல் வேண்டும்.தலைப் பாகை அணிந்திருத்தல் கூடாது.
மூர்த்திகளை தீண்டுதல்,மூர்த்திகளின் கீழ் கற்பூரம் ஏற்றல் கூடாது.
சுவாமிக்கு நிவேதனமாகும்போது பார்த்தல் கூடாது.
சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல்
நந்திக்கும் சுவாமிக்கும் குறுக்கே போதல் கூடாது. நந்தியெம்பெருமான் இமைக்காது சிவபிரானை பார்த்து தொழுதவண்ணம் இருப்பதால் குறுக்கேபோவது பாவத்தை ஏற்படுத்தும். தூபி,பலிபீடம்,கொடிமரம்,விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது. நிழலில் மூன்றுகூறு நீக்கி எஞ்சிய இரண்டு கூறினுள்ளே செல்லல் பாவம் இல்லை என்பர். திருவிளக்குகளை கையால் தூண்டவோ,தூண்டிய கைகளில் உள்ள எண்ணெய்யை தலையில் தடவுதலோ அன்றி கோயிற் தூணில் துடைத்தலோ கூடாது.
அபிடேக காலத்தில் உட்பிரகாரத்தை வலம்வருதல் கூடாது.
இறைவனுக்கு நிவேதனம் செய்யாதவற்றை உண்ணக்கூடாது.
தீட்டுடன் செல்லல் கூடாது ஒருவரை ஒருவர் நிந்தித்தல் கூடாது.
சண்டையிடுதல்,எச்சில் துப்புதல், காறி உமிழ்தல் அல்லது துப்புதல், மல சலம் கழித்தல்,வாயு பறிதல் (fart), என்பன பாவத்தை ஏற்படுத்தும்.

பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
மாதொருபாகனாகிய சிவனாரின் வலப்பக்கம் சிவனாகிய ஆணும் இடப்பக்கம் பெண்ணாகிய உமையும் இருப்பதைக் கொண்டு எழுந்ததாக இருக்க வேண்டும்.தோடுடைய செவியன் என்று ஞான சம்பந்தர் பாடுகிறார். தோடு என்பது பெண்கள் அணிவது. ஆண்கள் காதில் அணிவதற்கு குழை என்று பெயர். எனவே இறைவனின் இடப்பாகம் பெண்ணுக்குரியது என்பதை திருஞானசம்பந்தர் விளக்கியுள்ளார். காலனை சிவபிரான் இடப்பக்க காலால்தான் உதைக்கிறார். அதனாலேயே காலன் பிழைத்தான் என்பர் ஆன்றோர். காரணம் சிவனின் இடப்பக்கம் பெண்ணாகிய உமையம்மையாதலால் பெண்மை குணமாகிய இரக்கத்தின் விளைவால் இடக்கால் காலன்மேல் இரக்கம் கொண்டு காலனின் உயிர்பறிக்காது தண்டித்தது என்பர்.எனவே வலம்-ஆண் என்றும் இடம்-பெண் என்பதும் மரபாயிற்று.பேருந்தில் கூட வலப்புறம் ஆண்களும் இடப்புறம் பெண்களும் அமர்வது தமிழகத்தில் விதியாக்கப் பட்டுள்ளதை கண்டிருப்பீர்கள். இந்த "இடம்" பெண்களுக்கு என்பது காலம் காலமாக திருமணத்தில் தாலி ஏறியது தொட்டு குடும்ப நல்லதுகள்வரை பெண்களுக்கு "இடம்" என்ற பண்பாடு இருந்தமையால் ஏற்பட்டதே!எனவே இடப்புறமாக பெண்கள் நின்றும் வலப்புறமாக ஆண்கள் நின்றும் வழிபடல் வேண்டும் என வந்துள்ளது.ஆனால் இதை ஆலய வழிபாட்டு விதியாகக் கருதமுடியாது. இறைவன் தில்லையில் கூத்தாடும்போது வலப்புறமும் இடப்புறமும் வியாக்கிரதபாதரும் பதஞ்சலி முனிவரும் வழிபடுகின்றனர். எனவே இறைவனை இடப்பக்கமாக பெண்களும் வலப்பக்கமாக ஆண்களும் நின்று வழிபடல் வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. ஆனால் ஆலயத்தில் துஷ்டர்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க இம்முறையை சில ஆலயங்களில் கட்டாயவிதியாக கடைப்பிடிப்பர். அப்படி கடைப்பிடிப்பது நன்மையே என்பதால் "அவ் விதியை" ஒழுகுவதே உத்தமம்.
விநாயகர் வழிபாடு நந்தியெம்பெருமானை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டபின்னர் மேற்கொள்வதா அன்றி அதற்கு முதலிலேயே வழிபடல் வேண்டுமா?
பெரிய சிவாலயங்களில் (ஆகமவிதிப்படி முறையாக அமைந்த ஆலயங்கள்) கோபுர வாயிலுக்கு வெளியே உள்ள விநாயகரை வழிபட்டு, பின் கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபட்டு பின்னர் துவாரபாலகர்களை வழிபட்டு தொடர்ந்து விநாயகர் சந்நிதியில் வழிபட்ட பின்னர் சிவபெருமானை வழிபடல் வேண்டும்.திருக்கைலாயத்திலும் நந்தியின் அனுமதியுடனேயே திருக்கைலாயம் நுழைய முடியும். பின்னர் துவார பாலகர்களின் அனுமதி பெற்று உட்செல்லும் போது சிவகுடும்பத்தை வணங்க முடியும். சிவ குடும்ப வணக்கத்தில் விநாயகர் வணக்கம் முதன்மை பெறுகிறது. எனவே துவார பாலகர்களுக்கு அடுத்ததாக விநாயகர் வழிபாடும் அதனைத் தொடர்ந்து மூலமூர்த்தி வழிபாடும் விதியாகிறது.
சேரமான் பெருமானுக்கு முன்னமே ஔவையாரை துதிக்கையால் திருக்கைலாயம் கொண்டு சென்றவர் விநாயகர் என்ற தத்துவத்தை கருத்தில் நிறுத்தின் விநாயகர் வழிபாடு திருக்கைலாயம் செல்லும்போது ஏற்படும் இடர்களை நீக்கவல்லது.அதுபோல் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய இடர்களை விநாயகர் வழிபாடு நீக்க வேண்டியே பெரிய சிவாலயங்களில் கோபுரவாசலின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி இருப்பது மரபு என உணரலாம்.
எனவே கோபுர வாசலில் வெளியே வலப்புறமாகவுள்ள விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் நந்தியை வழிபட்டு துவாரபாலகர்களை வழிபட்டு அதன்பின்னர் விநாயர் சந்நிதி இருக்குமானால் அவ்விநாயகர் சந்நிதியில் வழிபட்டு பின் மூலமூர்த்தியை வழிபடல் வேண்டும் என்பது புலனாகிறது.


சுருங்கக் கூறின்
  • நித்திய கருமங்களை முடித்து நீராடி தூய ஆடையணிந்து சிவசின்னங்களாகிய திருநீறு,உருத்திராக்கம் அணிந்து ஆலயம் செல்லல் வேண்டும்.

  • கோபுரத்தை கண்டமாத்திரம் கைகூப்பி தொழவேண்டும்.

  • மலர்கள்,பாக்கு,மாலை,கற்பூரம்,பழம் என்பவற்றை கொண்டுசெல்லல் வேண்டும்.

  • தல விநாயகரை(கோபுரத்துக்கு வெளியே வலப்புறமாக இருப்பார்.) தரிசித்து குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டு வழிபட்டு உட்செல்ல வேண்டும்.

  • கொடிமரம்,பலிபீடம்,நந்தி ஆகியவற்றை வழிபடல் வேண்டும்.

  • துவார பாலகர்களை வணங்கியபின்னர் ஆலய திருமூலட்டானத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதியில் வழிபடல் வேண்டும்.

  • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள ஏனைய மூர்த்திகளை வழிபடல் வேண்டும்.

  • சண்டேசுவரரை மெதுவாக மும்முறை கைகளைத் தட்டி பின் வணங்குதல் வேண்டும். திருநீற்றை இருகைகளாலும் பணிவுடன் பெற்று சிவசிவ என உச்சரித்த வண்ணம்

  • மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும்.கிழே சிந்துதல் கூடாது.

  • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும்.

  • கொடிமரத்தின் கீழ்(பலிபீடத்திற்கு அப்பால்) விழுந்து வணங்க வேண்டும்.

  • வடக்கு முகமாக சற்று அமர்ந்து திருமுறை, திருவைந்தெழுத்தை ஓதி ஆலய வழிபாட்டை பூரணப்படுத்தல் வேண்டும்.

பிரதோஷம் விரதமும் வலம் வரும் முறையும்




            சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷமும் ஒன்று. பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தர வல்லது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
நோய்கள் நீங்கும்.
எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷமுமாக பிரதோஷம் வரும்.
பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையாகும்.

பிரதோஷ வரலாறு

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்  அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். நடப்பதை கண்டு அஞ்சிய அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட “நீலகண்டர்”-என திருப்பெயர்ப் பெறலானார் சிவபெருமான்.

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

பிரதோஷ வகைகள்

நித்திய பிரதோஷம் - தினமும் பிரதோஷ நேரத்தில் அதாவது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிவனை வணங்குவது.

பட்சப் பிரதோஷம் - சுக்லபட்ச சதுர்த்தி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம் - கிருஷ்ண பட்ச திரயோதசி காலத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம் - சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம் - உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய் – சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிடைக்கும்

பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை
பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, சோம சூட்ச பிரதட்சண முறையில் தான் வலம் வர வேண்டும்.
அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு சோம சூட்ச பிரதட்சணம் என்று பெயர்.

Wednesday, February 22, 2012

காயத்ரீ: மந்திரங்கள்










நவக்கிரகங்களின் துதிப்பாடல்

      
காயத்ரீ: மந்திரங்கள்

சூரியன் துதிப்பாடல்

சூரிய பகவான் காயத்ரீ:

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம்புகழும்,ஞாயிறேபோற்றி,
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி
வீரியாபோற்றி.வினைகள்களைவாய்.

பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராயதீமஹி|
தந்நோஆதித்ய:`ப்ரசோதயாத்||

சந்திரன் துதிப்பாடல்:

சந்திர பகவான் காயத்ரீ:

எங்கள் குறைகள் எல்லாம்தீர்க்கும்
திங்களே போற்றி,திருவருள்தருவாய்
சந்திரா போற்றி, சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி .

பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாயதீமஹி|
தந்நோஸோம:ப்ரசோதயாத்||

அங்காரகன் துதிப்பாடல்

செவ்வாய் காயத்ரீ:

சிறப்புறு மணியே செவ்வாய்தேவே
குறையிலாதருள்வாய்குணமுடன்வாழ
மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.

வீர த்வாஜய வித்மஹே
விக்த ஹஸ்தாய தீமஹி|
தந்தோ பெளம: ப்ரசோதயாத்||

புதன் துதிப்பாடல்:

புத பகவான் காயத்ரீ:

இதமுற வாழ இன்னல்கள்நீக்கும்
புத பகவானே பொன்னடிபோற்றி.
பந்தந் தாள்வாய்பண்ணொலியானே
உதவியே யருளும் உத்தமாபோற்றி.

ஓம் கஜத்வஜாயவித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி|
தந்நோ புத: ப்ரசோதயாத்||



   

Monday, January 30, 2012


24 ஆண்டிற்குப்பின் 
கோலாகலமாக
 நடந்தது.  இதையொட்டி, கடந்த 25ம்தேதி யாகசாலை பூஜை துவங்கியது. சிறப்பு 
பூஜைகளுக்குப்பின், நேற்று காலை 9.05 மணிக்கு, தமிழக நிதிஅமைச்சர் 
பன்னீர்செல்வம் பச்சைக்கொடியசைக்க,

 வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி, அம்பாள்
 ராஜகோபுர விமான கலசம் மற்றும் பரிவாரமூர்த்திகளின் கலசங்களுக்கு, புனித 
நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பரசுராம பட்டர் தலைமையில், 100க்கும் 
மேற்பட்ட சிவாச்சாரியார்கள், கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, 
பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில், தமிழக தொழிலாளர் 
நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், அறநிலையத்துறை செயலர் ராஜாராம், 
அறநிலையத்துறை ஆணையர் சந்திரகுமார், தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், 
எஸ்.பி.,ராஜேந்திரன், கோயில் செயல் அலுவலர் கசன்காத்த பெருமாள், உதவி 
ஆணையர் வீரராஜன், திருப்பணிக்குழுத் தலைவர் நாகஜோதி, ஏராளமான பக்தர்கள் 
கலந்து கொண்டனர் 

கும்பாபிஷேக படங்கள்
























































7 ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம்

















Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!