செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Monday, November 4, 2013

ஐப்பசி திருக்கல்யாணம் - 2013


ஐப்பசி திருக்கல்யாணம்

                                           
   செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா இம்மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை மற்றும் மாலை நேரங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை சுமார் 10 மணிக்கு அம்பாள் திருவீதியுலாவும்,  தொடர்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீர்த்த நீராடலும் நடைபெற்றன. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருமண மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருமண மரபுகளுடன் நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜபெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்துக்கு அழைத்துவரப்பட்டார். சுந்தரராஜபெருமாள், ராஜகோபாலசுவாமி கோவில்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சீர் கொண்டுவரப்பட்டது.  இதையடுத்து சுந்தரராஜபெருமாள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்படுவதுபோல, முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் திருமண சீராக புடவை, திருமாங்கல்யம், பணம் ஆகியவற்றை வழங்கினர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், தேங்காய், லட்டு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர்.
ஜன கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா,நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், இனாம்மணியாச்சி அதிமுக ஊராட்சி செயலர் ரமேஷ், தொழிலதிபர் செந்தில், கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!