செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Friday, March 1, 2013

மஹா சிவராத்திரி விரதமுறை



              
                     இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய சிவனை முன்னிலைப் படுத்தி நோற்கப்படும் இவ்விரதமானது மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வருவதாலேயே இதனை மஹா சிவராத்திரி என்று அழைப்பர். சிவராத்திரி விரதம் பற்றி பண்டைய புராணங்கள் நமக்குப் பல கதைகளைக் கூறினாலும்... பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் இயற்றி வரம் பெற்ற கதையே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது. ஊழிக்காலம் உலகனைத்தையும் சிவ னுக்குள் ஒடுக்கியது. உலக இயக்கம் நின்று போனது. கோள்கள் இயங்கவில்லை, பொழுது புலரவில்லை. தேவர்கள் முதற் கொண்டு எல்லா ஜீவராசிகளுமே தனக் குள் அடங்கிவிட்டதை எண்ணி நீலகண்டன் நீண்ட தவமியற்றத் தொடங்கிவிட்டான். அன்பே வடிவான அன்னை பராசக்தி அருள் நிறைந்தவளல்லவா. மறுபடியும் உலகம் இயங்க வேண்டும், உயிர்கள் மலர வேண்டும், கோள்கள் நிதம் தவறாது இயல் பாய்ச் சூழல வேண்டும் என்றெண்ணினார். இவற்றுக் கெல்லாம் அருள் பாலிக்க வேண்டிய சிவனோ கண்களை மூடிக் கொண்டு யோகத் தவநிலை கொண்டு விட்டான். அவன் கண் திறப்பது எப்போது? தனக்கு வரம் கிடைப்பது எப்போது? கலங்கிப் போன அன்னைக்கு ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
சிவன் பாதம் பணிந்து அவன் முன்னே அமர்ந்து அவளும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினாள். காலநேரம் எதுவும் கணக்கிட முடியாத நிலை..... அன்னையின் விரத காலம் நீண்டு கொண்டே போனது.



ஞானக் கண்ணால் அதையுணர்ந்த மகா தேவன் மனமிரங்கினார். தேவி என்ன வரம் வேண்டும் என்றபடியே அவர் கண்களைத் திறந்ததும் கோள்கள் எல்லாம் இயங்கத் தொடங்கின. உலகம் ஒளிமய மாகியது. அன்னையின் மனமோ ஆனந்தக் களிப்பெய்தியது. உலகமெல்லாம் பழையபடி உயிர்ப்புற வேண்டும் சுவாமி நியதிப்படி கோள் களெல்லாம் இயங்க வேண்டும். அத்தோடு நான் வணங்கி வரம் பெற்ற இத்திருநாளை என்னைப் போல் வணங்கி விரதம் இருந்து, விழித்திருந்து பூஜிப்போரை நீங்கள் ஆசீர்வதித்து அவர்கள் அனைவரும் ஐஸ்வரிய பாக்கியங்களைப் பெற்று வாழ அனுகிரகிக்க வேண்டும் ஐயனே என்று கேட்டுக்கொண்டாளாம். கருணைக் கடலான சிவனும் தன் தேவியின் வேண்டுதலை ஒரு சிறு மாற்றத்துடன் ஏற்று வரமளித்தருள் பாலித்து விட்டாராம். தேவி... கால நேர வரையறையில்லாது கடுந்தவமியற்றிய உன்போல். விரதமிருக்க இந்த உலகத்தில் மானிடர்களால் ஒருபோதும் முடியாது. எனவே மாசிமாத கிருஷ்ண பட்சத் சதுர்த்தஸியில் வரும் மஹா சிவராத்திரி தினத்தன்று இப்புனித விரதத்தை நான்கு ஜாமம் விழித்திருந்து பூஜனை செய்வோ ருக்கு பூரண பலன் கிடைக்க அருள் பாலிப்பேன் என்று வரங் கொடுத்தாராம். இதிலிருந்து சிவராத்திரி விரதத்தை முதன் முதலில் கடைப் பிடித்தருளியவர் அன்னை பராசக்திதான் என்ற உண்மையை நாம் உணரலாமன்றோ. மாயவன் அடிமுடி காணாது நின்ற போது அருட் பெருஞ் ஜோதியாக சிவன் எழுந்தருளிய தினமும் மஹா சிவராத்திரி தினம் தான் என்று புராணங்களுரைக்கின்றன.
காட்டிலே வேட்டையாடச் சென்ற வேட னொருவன் வழித்தடம் மாறி இருளுக்கும், விலங்கினங்களுக்கும் அஞ்சிக்கொண்டு ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டானாம்... தூக்கமோ கண்ணைச் சுழற்றுகிறது. தூங்கிவிட்டால் மரத்தினின்று விழுந்துவிட நேரும் ஆதலால் தூங்காமல் இருக்க வேண்டி மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து நிலத்தில் போட்டு வந்தானாம். அவன் போட்ட இலைகள் சாதாரண இலைகளல்ல. அவை சிவனார்க்குகந்த வில்வந் தழைகளாம். அந்தப் புனித பத்திரங்கள் யாவும் வீழ்ந்த இடமே மரத்தின் கீழ் உருவாகியிருந்த சிவலிங்கத்தின் மீதாம். பூஜை புனஸ்காரங் கள் பண்டிகைகள், விரதங்கள் என்று எதையுமே அறியாத வேடனொருவன் தன்னையே அறியாமல் செய்த வில்வார்ச் சனையால் ஈற்றில் பேரின்பப் பெறுவாழ் வெய்தினானாமெனில் சிவராத்திரி தினத்தின் மகிமையை அறிய இதைவிடவேறு சான்று களும் நமக்கு வேண்டுமோ. ஒரு சிவராத்திரி தினத்திலே இந்த வில்வர்ச்சனை நிகழ்ந்தமையே வேடனுக்கு அப்போது அமைந்ததாகச் சிவபுராணம் கூறுகிறது.





சிவராத்திரி விரத முறை :
 
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

           என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும். தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.
இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.  மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.  "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
 "நாமும் இந்த விரத்தை கடைபிடிப்போம் வாழ்வில் வாளமாய்  வாழ்வோம் "

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
 என்நா
ட்டவர்க்கும் இறைவா போற்றி!

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!