செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Thursday, April 17, 2014

செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா


திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்



செண்பகவல்லி அம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தெப்பத்திருவிழா


11-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவில் கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில், தெப்ப திருவிழா நடந்தது. தெப்பத்தில் 300-க்கு மேற்பட்ட டேங்கர் லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. தெப்பத்தை சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா சென்று, அடைக்கலம்காத்தான் மண்டபத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

பின்னர் மெயின் ரோடு, தெற்கு பஜார் வழியாக சுவாமி- அம்பாள் தெப்பத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து சுவாமி- அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளி, 9 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது முதல் 3 சுற்றுகளுக்கு மங்கள வாத்தியங்களும், அடுத்த 3 சுற்றுகளுக்கு வேத பாராயணமும், இறுதி 3 சுற்றுகளுக்கு தேவார இன்னிசையும் பாடப்பட்டது. செஞ்சுரி பட்டாசு அதிபர் கணேஷ்பாபு ஏற்பாட்டில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்


திரளான பக்தர்கள் தரிசனம்


செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஏப்.14- பங்குனி திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிகழ்ச்சியான தேரோட்டம் கம்மவார் சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

காலை 8 மணிக்கு சுவாமி- அம்பாள் தேரில் எழுந்தருளினர். 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. மூப்பன்பட்டி மாடசாமி குடும்பத்தினர் தேர் தடி போட்டனர். 


திரளான பக்தர்கள், செண்டை மேளம் முழங்க தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வந்தது. காலை 10 மணிக்கு தேர் நிலையத்தை வந்தடைந்தது.

தேரோட்டத்தில், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கம்மவார் சங்க தலைவர் கனகராஜ், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் வேல்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

தீர்த்தவாரி- தெப்ப திருவிழா

திங்கட்கிழமை ஆயிரவைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.

Monday, April 7, 2014

பங்குனித் திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் கொடிப்பட்டம் மாடவீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் கொடி பட்டத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 10.40 மணிக்கு கொடியேற்றப்பட்டது.
பின்னர் நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுப்புராஜ், அதிமுக நகரச் செயலர் சங்கரபாண்டியன், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், தொழிலதிபர்கள், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் மற்றும் மண்டகப்படிதாரர் சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பங்குனித் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை 4 மணியளவில் திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப் பணிவிடை ஸ்ரீபலிநாதர் அஸ்திரத்தேவர் திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா வந்தனர்.  திருவிழாவின் முக்கிய திருநாளான தேரோட்டம் இம்மாதம் 13-ம் தேதி காலை 8 மணிக்கு கம்மவார் சங்கம் மண்டகப்படிதாரர்கள் சார்பில் நடைபெறும். 14-ம் தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தவாரி தீபாராதனை, யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி, அம்பாள் திருவீதீயுலா நடைபெறுகிறது.  15-ம் தேதி கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெறும்

Friday, April 4, 2014

பங்குனித் திருவிழா

அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (ஏப்.5) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்காலை 10.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் 9-ம் திருநாளான ஏப்.13-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். 10-ம் திருநாளான திங்கள்கிழமை(ஏப்.14) தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 11-ம் திருநாளான செவ்வாய்க்கிழமை(ஏப்.15) தெப்பத் திருவிழாவும் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, கோயில் பின்புறம் உள்ள மைதானத்தில் ராட்டினங்கள் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறுகின்றன.

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!