செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Wednesday, December 11, 2013

Thiruvempavai

திருவெம்பாவை

(திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)

 திருச்சிற்றம்பலம்

1.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1

தோழியர்: துவக்கம் இறுதி இல்லாத அரிய பெரிய சோதியை
நாங்கள் பாடுகின்றொம். அதைக் கேட்டும் வாள் போன்ற அழகிய
கண்களை உடைய நீ தூங்குகின்றாயே ! உன் காதுகள் உணர்ச்சியற்றுப்
போய்விட்டனவா ? பெருந்தேவனான சிவபெருமானின் அழகிய கழல்களை
வாழ்த்திய வாழ்த்தொலி வீதியின் துவக்கத்தில் கேட்ட அந்தக் கணத்திலேயே
விம்மி விம்மி மெய்ம்மறந்து தான் இருக்கும் மலர் நிறைந்த படுக்கையிலேயே
தன்னை மறந்து ஒருத்தி கிடக்கிறாள். அவள் திறம் தான் என்னே !
இதுவோ உன்னுடைய தன்மை, எம் தோழி ?!

மாது - பெண்; வளருதி - தூங்குகின்றாய்; போது - மலர்;
அமளி - படுக்கை.


2.
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2

  தோழியர்: இரவு பகலெல்லாம் - நாம் பேசும் பொழுதெல்லாம்,
"எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்" என்று சொல்வாய்.
ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின் மேல் தான் உன் விருப்பத்தை
உண்மையில் வைத்தாயோ ?
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது ?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?
(அதன் பெருமையைக் கண்டும் தம் கீழ்மை கண்டும் நாணி)
விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களை
நமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,
தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே ! நாம் எங்கே !

போது - மலர்; அமளி - படுக்கை; தேசன் - ஒளியுருவன்.

3.
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3

  தோழியர்: முத்துப் போன்ற ஒளியான புன்னகையை உடையவளே !
எல்லார்க்கும் முன்பாகவே எழுந்திருந்து, "என் அத்தன், ஆனந்தன்,
அமுதன்" என்று வாய் திளைக்க இனிக்க இனிக்கப் பேசுவாய் !
(இன்று என்ன ஆயிற்று உனக்கு ?) வந்து கதவைத் திற !
படுத்திருப்பவள்: பத்து குணங்களை உடையவர்களே !
இறைவனின் அடியாகளாய் முதிர்ச்சி பெற்றவர்களே !
(என்னிடம்) நட்புடையவர்களே ! புதியவளாகிய என்னுடைய
குற்றத்தை நீக்கி என்னையும் அடியார் ஆக்கிக்கொண்டால் குற்றமா ?
தோழியர்: நீ இறைவன் பால் வைத்துள்ள அன்பு எங்களுக்குத்
தெரியாதா என்ன ? உள்ளம் ஒழுங்கு பட உள்ளவர்கள் நம் சிவபெருமானைப்
பாடாது போவாரா என்ன ? எங்களுக்கு இதெல்லாம் தேவை தான் !

பத்து - தசகாரியம்; பாங்கு - நட்பு;
புன்மை - கீழ்மை.

4.
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4

தோழியர்: முத்துப் போன்ற புன்னகை உடையவளே !
இன்னுமா விடியவில்லை ?
படுத்திருப்பவள்: (அழகிய கிளி போன்ற சொற்களைப் பேசும்)
தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா ?
தோழியர்: உள்ளதையே எண்ணித்தான் சொல்லுகின்றோம்.
கண் துயின்று வீணாகக் காலத்தைப் போக்காதே ! விண்ணுலகும்
போற்றும் ஒரே மருந்தை, வேதத்தால் மேன்மையாக உணரப்படும்
பொருளை, காண இனிய சிவபெருமானை நெக்குருகக் கசிந்து
பாட வந்துள்ள நாங்கள் இதெல்லாம் செய்ய மாட்டோம்.
வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். குறைந்தால் தூங்கிக்கொள் !

ஒண்ணித்திலநகையாய் - முத்துப் போன்ற புன்னகையாய் (ஒள் நித்தில நகையாய்).


5.
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5

தோழியர்: "திருமாலும் நான்முகனும் காணமுடியாத
மலையை நாம் அறிவோம்" என்று (உணர்ந்தவர்களைப் போன்று)
பொய்யாகவே பேசிக்கொண்டிருக்கும் பாலும் தேனும் போன்ற
(இனிய சொற்களைப் பேசும்) வஞ்சகியே, கதவைத் திற !
இவ்வுலகமும், விண்ணுலகமும், பிறவுலகங்களும் அறிவதற்கு
அரிய பெருமானுடைய திருக்கோலமும், அவர் நம்மை ஆட்கொண்டு
குற்றங்களை நீக்கும் பெருமையையும் பாடி "சிவனே! சிவனே!" என்று
நாங்கள் ஓலமிட்ட போதும், சற்றும் உணர்ச்சியில்லாமல் இருக்கிறாயே !
மணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை ?!

பொக்கம் - பொய்; படிறீ - ஏமாற்றுக்காரி; ஞாலம் - உலகம்;
ஏலக்குழலி - மணம் சேர் கூந்தலை உடையவள்.



6.மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய். 6

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று,
"நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்" என்று கூறிவிட்டு,
வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா
பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும்
அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி
நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய
கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத்
தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் !
எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான
சிவபெருமானைப் பாடு !

நென்னலை - நேற்று; தலையளித்து - கருணைகூர நோக்குதல்;
ஊன் - உடல்.

7.
அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை என்அரையன் இன்னமுது என்று எல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7

தோழியர்: அம்மா ! இவையும் உன் குணங்களில் ஒன்றோ ?!
பலபல தேவர்கள் நினைத்தலுக்கும் அரியவனான செம்பொருளாம்
பெருமானின் சின்னங்கள் கேட்ட மாத்திரத்திலேயே "சிவ சிவ" என்று
சொல்லுவாய். "தென்னாடுடைய பெருமானே" என்று சொல்லி
முடிப்பதற்குள்ளேயே தீயிலிட்ட மெழுகு போல உருகிவிடுவாய்.
எம்பெருமானை, "என் அரசே ! இனிய அமுதம் போன்றவனே !"
என்று நாங்கள் எல்லோரும் பலவேறு விதமாகச் சொல்லுகின்றோம்.
இன்னும் நீ தூங்குகிறாயோ ! (உணர்வற்ற) கடுமையான நெஞ்சம்
கொண்டவரைப் போல சிறு அசைவும் இன்றிக் கிடக்கின்றாயே !
தூக்கத்தின் தன்மை தான் என்னே !

உன்னல் - நினைத்தல்; இருஞ்சீர் - மிக நேரிய தன்மை; சின்னங்கள்
- சிவச் சின்னங்கள் (சங்கு முதலான ஒலிகள்); அரையன் - மன்னன்;
வாளா - சும்மா; பரிசு - தன்மை.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8

தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

9.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 9

பழமையான பொருட்களுக்கெல்லாம் பழமையான முதல்வனே !
இப்போது தோன்றிய புதுமையானவற்றுக்கும் புதுமையானவனே !
உன்னைப் பிரானகப் பெற்ற உன்னுடைய நேர்த்தியான அடியாரான
நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம்; அவர்களுக்கே
நண்பர்களாவோம்; அத்தகையவரையே நாங்கள் மணம் செய்துகொள்வோம்;
அத்தகையோர் சொல்லும் வகைப்படியே அவர்க்கு அடியவர்களாய்ப்
பணி செய்வோம். இவ்வாறே எங்களுக்கு எம்பிரான் அருள் செய்தால்
எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை !

பேர்த்தும் - புதுமையான; பாங்கு - நட்பு; பரிசு - முறை; தொழும்பு
- அடிமை

10.
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 10

அவனுடைய பாதமாகிய மலர்கள் பாதாளங்கள் ஏழிற்குக்
கீழும் சென்று சொல்லுதற்கும் எட்டா வகை உள்ளன; அவனுடைய
மலர் நிறைந்த கட்டிய சடையும் பொருள்கள் எல்லாவற்றின் எல்லைப்புறத்தன;
அவன் பெண்ணை ஒருபாகம் உடையவன்; அவன் திருவுருவங்களோ
ஒன்றிரண்டல்ல ! வேதங்கள் முதலாக விண்ணோரும், மண்ணோரும்
துதிக்கின்ற போதும் ஒருவராலும் இவ்வாறு எனச் சொல்லப்பட முடியாதவன்;
ஒரே துணைவன்; தொண்டர் உள்ளத்து இருப்பவன்; குற்றமற்ற
குலப்பெண்களான சிவன் கோயிற் பணிசெய்யும் பெண்களே !
அவனுடைய ஊர் எது ? பேர் எது ? யார் உறவினர்கள் ? யார்
உறவினரல்லாதவர்கள் ? அப்படிப்பட்டவனை எவ்வாறு பாடுவது ?!

சொற்கழிவு - சொல்லமுடியாத; போது - மலர்; உலவா - முடியாத;
கோது - குற்றம்; பரிசு - வழி.



11.
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11

வண்டுகள் மொய்க்கின்ற குளத்தில் கைகளால் குடைந்து
நீராடும்பொழுது உன் திருவடிகளைப் பாடி, வழிமுறையாக வந்த
அடியவர்களாகிய நாங்கள் வாழ்வுபெற்றோம். ஐயனே ! ஆர்க்கின்ற
நெருப்பு போன்று சிவந்தவனே ! திருநீறு பூசும் செல்வனே ! சிறிய
இடையையும், மை நிறைந்த அகன்ற கண்களையும் உடைய உமையின்
மணவாளனே ! ஐயா, நீ ஆட்கொண்டருளும் திருவிளையாடலில்
உய்யும் அடியார்கள் உய்யும் வகையில் நாங்களும் உய்ந்துவிட்டோம் !
நாங்கள் தளர்வுறாமல் காப்பாயாக !

மொய் - மொய்க்கின்ற வண்டு; தடம் - நீர்நிலை; பொய்கை - குளம்;
அழல் - தீ; மருங்குல் - இடை; எய்த்தல் - இளைத்தல்.

12.
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 12

பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக
நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன்; தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி
ஆடுகின்ற கூத்தப்பிரான்; இந்த விண்ணையும், மண்ணையும், நம்
எல்லோரையும் விளையாட்டாகவே காத்தும், படைத்தும், கவர்ந்தும்
வருபவன்; அவன் புகழைப் பேசியும், வளைகள் ஒலிக்கவும்,
மேகலைகள் ஆராவரிக்கவும், கூந்தல் மேல் வண்டுகள்
ரீங்காரமிடவும், பூக்கள் நிறைந்த இக்குளத்தில்  ஈசனின்
பொற்பாதத்தை வாழ்த்திக்கொண்டே நீராடுங்கள் !

குவலயம் - பூமி; கரத்தல் - உள் வாங்குதல்; குழல் - கூந்தல்.

13.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 13

குவளையின் கறுத்த மலராலும், தாமரையின் சிவந்த மலராலும்,
சிறிய உடலை உடைய வண்டுகள் செய்யும் ஒலியாலும்,
தம்முடைய குற்றங்களை நீக்க வேண்டுபவர்கள் வந்து தொழ,
எங்கள் பிராட்டியான சக்தியும், எம்பிரான் சிவபெருமானும் இருப்பது
போலக் காட்சியளிக்கும் நீர் நிறைந்த இம்மடுவில் பரவி அளைந்து,
நாம் அணிந்துள்ள சங்குகள் சலசலக்க, சிலம்பு அத்துடன் இணைந்து
ஒலிக்க, மார்பகங்கள் விம்ம, அளைந்தாடும் நீரும் விம்மி மேற்பொங்க,
தாமரை மலர் நிறைந்த இந்நீரில் ஆடுங்கள் !

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர்.

14.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 14

காதில் அணிந்துள்ள குழைகள் ஆட,
பொன் அணிகலன்கள் ஆட, பூமாலையணிந்த கூந்தல் ஆட,
(அதைச் சுற்றும்) வண்டுக் கூட்டம் ஆட, குளிர்ந்த நீராடிச்
திருச்சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தின் பொருளை -
சிவபெருமானைப் - பாடி,மிறைவன் அந்த வேதத்தின்
பொருள் ஆகும் திறத்தினைப் பாடி, அவனுடைய சோதி
வடிவின் பெருமையைப் பாடி,கவன் அணிந்துள்ள கொன்றைக்
கொத்தினைப் பாடி, எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்ற
வல்லமையைப் பாடி, அவனே எல்லாவற்றிற்கும் இறுதியும்
ஆவதைப் பாடி, (மும்மலம் ஆகிய) பிறவற்றை நீக்கி நம்மை
வளர்த்தெடுத்த இறையருட் சத்தியின் பாதத் தத்துவத்தையும்
பாடி நீராடுங்கள் !

பைம்பூண் - பொன்னாபரணம்; கோதை - பூமாலை; குழாம்
- கூட்டம்; சீதம் - குளுமை; தார் - மாலை.

15.
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 15

அவ்வப்போது "எம்பெருமான்" என்று சொல்லிச் சொல்லி,
நம்பெருமானின் பெருமையையே வாய் ஓயாமல் எப்போதும்
உள்ளமெல்லாம் மகிழச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
எப்பொழுதும் விடாது வழிந்துகொண்டிருக்கும் தாரைதாரையான
கண்ணீரில் தோய்ந்து, (இறைவனையே எண்ணி எப்போதும்
அவனுடன் இருக்கும்) இவள் இவ்வுலக நினைவுக்கே திரும்புவதில்லை !
வேறு தேவர்களை இவள் பணிவதில்லை ! பேரரசனாகிய இறைவன்பால்
இவ்வாறு பித்துப் பிடிக்கும் தன்மையையும், அவ்வாறு செய்து ஆட்கொள்ளும்
வல்லவராகிய சிவபெருமானின் திருப்பாதத்தையும் வாயாரப் பாடி,
கச்சை அணிந்த மார்பகம் உடைய பெண்களே, நாம் நேர்த்தியான,
மலர் நிறைந்த இந்நீரில் ஆடுவோம் !

ஓவாள் - ஓயமாட்டாள்; களி - மகிழ்ச்சி; பனித்தல் - ஈரமாக்குதல்;
பார் - உலகம்; அரையர் - அரசர்.

16.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16

மழையே ! இந்தக் கடலில் உள்ள நீரின் ஆவியாய்த்
திரண்டு வானில் எழுந்து, உடையவளகிய உமையம்மையைப்
போல் (கார் நிறத்தில்) திகழ்க ! எங்களை ஆளுடைய அவளின்
மெல்லிய இடை போல மின்னைலாய்ப் பொலிக ! எம்பிராட்டியின்
திருவடியில் திகழும் பொற்சிலம்பின் ஓசை போல (இடியாய்) ஒலிக்க !
அவளுடைய திருப்புருவம் வளைந்தது போல வான்வில்லாய் வளைக !
நம்மை ஆளுடைய அவளோடு எப்போதும் பிரிவின்றி விளங்கும்
எம்பிரானாகிய சிவபெருமானுடைய அன்பர்களுக்கு, முனைப்போடு
தான் வந்து அவள் விரைவாகவே அளிக்கின்ற இனிய அருள்
என்பது போலப் பொழிக !

இட்டிடை - சிறிய இடை; சிலை குலவுதல் - வில்லென வளைதல்;
முன்னி - முற்பட்டு.

17.
செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 17

வண்டு தேன் உண்ணும் கரிய கூந்தலை உடையவளே !
சிவந்த கண்ணை உடைய திருமாலிடமும், திசைக்கு
ஒன்றாக நான்கு முகங்களை உடைய பிரமனிடமும், தேவர்களிடமும்
எங்குமே இல்லாத அரிய இன்பம் நம்முடையது ஆகுமாறு,
நம்முடைய குற்றங்களெல்லாம் போக்கி, நம் ஒவ்வொருவர்
இல்லங்களிலும் இருந்து செந்தாமரை போன்ற பொற்பாதங்களைத்
தந்தருள் செய்யும் தொழில் உடையவனை, அழகிய கண்களை உடைய
நம் அரசனை, அடிமைகளாகிய நமக்கு ஆரமுதமானவனை,
நம்பிரானைப் பாடுவதால் நலம் ஓங்க, தாமரைகள் நிறைந்த
இந்நீரில் பாய்ந்தாடுவோம் !

கொங்கு - தேன் (உண்ணும் வண்டு); கோதாட்டி - குற்றம் நீக்கி;
சேவகன் - ஊழியன்; பங்கயம் - தாமரை.

18.
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 18

அண்ணாமலையாரின் திருவடிகளைச் சென்று தொழும்,
விண்ணவர்களின் மகுடங்களில் உள்ள மணிகள் எல்லாம்
(இறைவரின் திருவடியின் ஒளியின் முன்னம்) தம் ஒளி குறைந்து
தோன்றுவது போல், (இறைவன் பேரொளிக்கு முன் மற்றெவரும்
சிறு ஒப்புமைக்கும் உரியவரல்லர்.) கண்ணான கதிரவனின் ஒளி தோன்றி
இருட்டினை நீக்க, அந்நிலையில் தம் குன்றிய ஒளி மறைக்கப்பட்டு,
விண்மீன்கள் காணாது போகின்றன. பெண், ஆண், அலி மற்றும்
ஒளி வெடிப்புகள் நிறைந்த விண்ணும் மண்ணுமாகி நின்று, இவை
அத்தனையிலிருந்தும் தான் வேறாகவும் நிற்கின்றானை, கண்கள்
பருகி மகிழும் அமுதமாக நின்றானுடைய கழல் பூண்ட திருவடிகளைப்
பாடி, இந்தப் பூம்புனலில் பாய்ந்தாடலாம், பெண்ணே !

வீறு - ஒளி/பெருமை; கார் - இருள்; கரப்ப - நீக்க; தாரகை - விண்மீன்;
பிறங்கொளி - மின்னும் ஒளி.

19.
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 19

"உன் கையில் உள்ள பிள்ளை, உன்னுடைய கட்டுப்பாட்டில்",
என்ற பழமொழி நிகழ்ந்துவிடும் என்ற எம்முடைய அச்சம் காரணமாக,
எம்பெருமானே உன்னிடத்தில் ஒன்று கேட்போம்.
எம்முடைய மார்பகங்கள் உன் அன்பர் அல்லாதவருடைய தோளைக்
கூடக்கூடாது. (உன் அன்பரையே நாங்கள் திருமணம் செய்யவேண்டும்).
எம்முடைய கைகள் உனக்கு அல்லாது வேறு எந்த வேலையையும்
செய்யக்கூடாது. இரவும் பகலும் எம்முடைய கண்கள் வேறு எதையும்
கண்டு நிற்கக்கூடாது. எமக்கு இவ்வகை எம் கோமானாகிய நீ
அருளினால், சூரியன் எத்திசையில் உதித்தால் தான் எங்களுக்கென்ன ?

கொங்கை - மார்பகம்; கங்குல் - இரவு; பரிசு - வகை; ஞாயிறு - கதிரவன்.

20.
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20

போற்றி ! உன் தொடக்கமான மலர் போன்ற பாதம் அருளட்டும் !
போற்றி ! உன் முடிவான செம்மலர் போன்ற திருவடிகள் அருளட்டும் !
(இறைவனுக்கு ஆதியும் அந்தமும் இல்லாததால் அவன் பாதமே எல்லாம்).
போற்றி - எல்லா உயிர்களுக்கும் தோற்றம் ஆன பொற்பாதத்திற்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் இன்பமாகும் பூப்போன்ற கழல்களுக்கு !
போற்றி - எல்லா உயிர்களுக்கும் முடிவாகும் இணையான இரு பாதங்களுக்கு !
போற்றி - திருமாலும், நான்முகனும் காணாத திருவடித் தாமரைக்கு !
போற்றி - நாம் உய்வுறுமாறு ஆட்கொண்டருளும் பொன்மலரான திருவடிகளுக்கு !
போற்றி ! போற்றி ! மார்கழி நீராடுவோம் !

ஈறு - முடிவு; புண்டரிகம் - தாமரை.


திருச்சிற்றம்பலம் 

Monday, November 4, 2013

ஐப்பசி திருக்கல்யாணம் - 2013


ஐப்பசி திருக்கல்யாணம்

                                           
   செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா இம்மாதம் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை மற்றும் மாலை நேரங்களில் அம்பாள் திருவீதியுலா நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம், வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காலை சுமார் 10 மணிக்கு அம்பாள் திருவீதியுலாவும்,  தொடர்ந்து தெப்பத்தில் மஞ்சள் தீர்த்த நீராடலும் நடைபெற்றன. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, திருமண மண்டபத்தில் எழுந்தருளினர்.
திருமண மரபுகளுடன் நீலாதேவி, ஸ்ரீதேவி சமேத சுந்தரராஜபெருமாள் பல்லக்கு அலங்காரத்தில் பூவனநாத சுவாமி, செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணத்துக்கு அழைத்துவரப்பட்டார். சுந்தரராஜபெருமாள், ராஜகோபாலசுவாமி கோவில்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சீர் கொண்டுவரப்பட்டது.  இதையடுத்து சுந்தரராஜபெருமாள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்படுவதுபோல, முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்கள் திருமண சீராக புடவை, திருமாங்கல்யம், பணம் ஆகியவற்றை வழங்கினர். பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், தேங்காய், லட்டு அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் சென்றனர்.
ஜன கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா,நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், இனாம்மணியாச்சி அதிமுக ஊராட்சி செயலர் ரமேஷ், தொழிலதிபர் செந்தில், கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள், தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Saturday, August 17, 2013

செண்பகவல்லியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா

                                                  மனம் போல் மாங்கல்ய பாக்கியமும், பேர் சொல்ல பிள்ளை வரமும் பெற்றுத் தரும் திருநாள்தான் ஆடிப்பூரம். புனிதமான இந்த தினத்தில் தான் அம்பிகை பூப்பெய்தினாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
அன்றைய தினம் அவளுக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தருது சாந்தியும் செய்வார்கள்.   

                                                     கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் நேற்று ஆடிப்பூர வளை காப்பு விழா நடந்தது. இதை யொட்டி காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், 7 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபா ராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அம்பாளுக்கு வளைகாப்பு விழா நடந்தது. அம்மனுக்கு பாசிப்பயறு கட்டி, கர்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும், இதில் அம்பாளுக்கு பாசிப்பயறு படையல் வைக்கப்பட்டு வண்ணமிகு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார தீபா ராதனை நடந்தது. சுவாமிநாதபட்டர், செண்பகராமபட்டர், கோபாலகிருஷ்ணபட்டர், சங்கர்பட்டர் பூஜை களை நடத்தினர். விழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று அம்பாளை வழிபட்டனர். மேலும் விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், சர்க்கரை பொங்கல், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
                                கோயில் தர்க்கார் செல்லத்துரை, கோயில் செயல்அலுவலர் கசன்காத்தபெரு மாள், தலைமை எழுத்தர் ராமலிங்கம், எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு, நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி, துணைத் தலைவர் ராமர், நகர அதிமுக செயலர் சங்கரபாண்டியன், தொழிலதிபர் திலகராஜ் ஆறுமுகச்சாமி, ஜனகல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Friday, April 5, 2013

கொடியெற்றம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா

கொடியெற்றம்

 






































Tuesday, April 2, 2013

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா

ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்  என்று பெரியோர்கள் சொல்லுவர்கள். காரணம் ஆண்,பெண் வேறுபாடு இன்றி படித்தோர் , படிக்காதவர் என்று பாகுபாடு இன்றி பெரியோர் சிறியோர் என்று வயது வரம்பின்றி அனைவரும் இறைவன் முன் சமம் என்றும் உணர்த்தவே இவ்வாறு கூறினார்கள் .

 இங்கே  இடம் பிடித்தால் அங்கே  இடம்  உண்டு  
என்று சொல்லுவர்கள் அது என்னனு  தெரியுமா!
இங்கே  இடம் பிடித்தால் என்றால் தேர் வடம் பிடிப்பதில் இடம் பிடித்தல் என்றும் , அங்கே இடம்  உண்டு என்றால் கைலாயத்தில்  இடம் உண்டு என்றும் சொல்லி வைத்தார்கள் ஆகையால்  நாம் அனைவரும் ஓன்று கூடி வடம் பிடித்து தேர் இழுப்போம் மறுபிறவி இல்லாத பலனை அடைவோம். வாருங்கள்........


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலில் பங்குனி பெருந்திருவிழா  

 

 

38-வது ஆண்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற உள்ளது 

                கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்-பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா வருகிற பங்குனி 23-ம் (05.04.2013) தேதி  காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது  விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி-அம்பாள் வீதி உலாவும், சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.  விழாவின் 8ம் திருநாளான வருகிற பங்குனி மாதம்  31ம் (13.04.2013) தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு 38-வது ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறும்.
          இந்த வருடம் தனி சிறப்பாக  37 ஆண்டுகள் மாலையில் நடந்த தேர் திருவிழா இந்த ஆண்டு காலையில் நடைபெறவுள்ளது.

Friday, March 1, 2013

மஹா சிவராத்திரி விரதமுறை



              
                     இந்து மதம் கூறும் மேன்மை மிக்க விரதங்களில் மஹா சிவராத்திரி விரதமும் ஒன்றாகும். பரம்பொருளாகிய சிவனை முன்னிலைப் படுத்தி நோற்கப்படும் இவ்விரதமானது மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில் வருவதாலேயே இதனை மஹா சிவராத்திரி என்று அழைப்பர். சிவராத்திரி விரதம் பற்றி பண்டைய புராணங்கள் நமக்குப் பல கதைகளைக் கூறினாலும்... பார்வதி தேவி பரமேஸ்வரனை நோக்கிக் கடுந்தவம் இயற்றி வரம் பெற்ற கதையே சிறப்பாகக் கொள்ளப் படுகிறது. ஊழிக்காலம் உலகனைத்தையும் சிவ னுக்குள் ஒடுக்கியது. உலக இயக்கம் நின்று போனது. கோள்கள் இயங்கவில்லை, பொழுது புலரவில்லை. தேவர்கள் முதற் கொண்டு எல்லா ஜீவராசிகளுமே தனக் குள் அடங்கிவிட்டதை எண்ணி நீலகண்டன் நீண்ட தவமியற்றத் தொடங்கிவிட்டான். அன்பே வடிவான அன்னை பராசக்தி அருள் நிறைந்தவளல்லவா. மறுபடியும் உலகம் இயங்க வேண்டும், உயிர்கள் மலர வேண்டும், கோள்கள் நிதம் தவறாது இயல் பாய்ச் சூழல வேண்டும் என்றெண்ணினார். இவற்றுக் கெல்லாம் அருள் பாலிக்க வேண்டிய சிவனோ கண்களை மூடிக் கொண்டு யோகத் தவநிலை கொண்டு விட்டான். அவன் கண் திறப்பது எப்போது? தனக்கு வரம் கிடைப்பது எப்போது? கலங்கிப் போன அன்னைக்கு ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
சிவன் பாதம் பணிந்து அவன் முன்னே அமர்ந்து அவளும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினாள். காலநேரம் எதுவும் கணக்கிட முடியாத நிலை..... அன்னையின் விரத காலம் நீண்டு கொண்டே போனது.



ஞானக் கண்ணால் அதையுணர்ந்த மகா தேவன் மனமிரங்கினார். தேவி என்ன வரம் வேண்டும் என்றபடியே அவர் கண்களைத் திறந்ததும் கோள்கள் எல்லாம் இயங்கத் தொடங்கின. உலகம் ஒளிமய மாகியது. அன்னையின் மனமோ ஆனந்தக் களிப்பெய்தியது. உலகமெல்லாம் பழையபடி உயிர்ப்புற வேண்டும் சுவாமி நியதிப்படி கோள் களெல்லாம் இயங்க வேண்டும். அத்தோடு நான் வணங்கி வரம் பெற்ற இத்திருநாளை என்னைப் போல் வணங்கி விரதம் இருந்து, விழித்திருந்து பூஜிப்போரை நீங்கள் ஆசீர்வதித்து அவர்கள் அனைவரும் ஐஸ்வரிய பாக்கியங்களைப் பெற்று வாழ அனுகிரகிக்க வேண்டும் ஐயனே என்று கேட்டுக்கொண்டாளாம். கருணைக் கடலான சிவனும் தன் தேவியின் வேண்டுதலை ஒரு சிறு மாற்றத்துடன் ஏற்று வரமளித்தருள் பாலித்து விட்டாராம். தேவி... கால நேர வரையறையில்லாது கடுந்தவமியற்றிய உன்போல். விரதமிருக்க இந்த உலகத்தில் மானிடர்களால் ஒருபோதும் முடியாது. எனவே மாசிமாத கிருஷ்ண பட்சத் சதுர்த்தஸியில் வரும் மஹா சிவராத்திரி தினத்தன்று இப்புனித விரதத்தை நான்கு ஜாமம் விழித்திருந்து பூஜனை செய்வோ ருக்கு பூரண பலன் கிடைக்க அருள் பாலிப்பேன் என்று வரங் கொடுத்தாராம். இதிலிருந்து சிவராத்திரி விரதத்தை முதன் முதலில் கடைப் பிடித்தருளியவர் அன்னை பராசக்திதான் என்ற உண்மையை நாம் உணரலாமன்றோ. மாயவன் அடிமுடி காணாது நின்ற போது அருட் பெருஞ் ஜோதியாக சிவன் எழுந்தருளிய தினமும் மஹா சிவராத்திரி தினம் தான் என்று புராணங்களுரைக்கின்றன.
காட்டிலே வேட்டையாடச் சென்ற வேட னொருவன் வழித்தடம் மாறி இருளுக்கும், விலங்கினங்களுக்கும் அஞ்சிக்கொண்டு ஒரு வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டானாம்... தூக்கமோ கண்ணைச் சுழற்றுகிறது. தூங்கிவிட்டால் மரத்தினின்று விழுந்துவிட நேரும் ஆதலால் தூங்காமல் இருக்க வேண்டி மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து நிலத்தில் போட்டு வந்தானாம். அவன் போட்ட இலைகள் சாதாரண இலைகளல்ல. அவை சிவனார்க்குகந்த வில்வந் தழைகளாம். அந்தப் புனித பத்திரங்கள் யாவும் வீழ்ந்த இடமே மரத்தின் கீழ் உருவாகியிருந்த சிவலிங்கத்தின் மீதாம். பூஜை புனஸ்காரங் கள் பண்டிகைகள், விரதங்கள் என்று எதையுமே அறியாத வேடனொருவன் தன்னையே அறியாமல் செய்த வில்வார்ச் சனையால் ஈற்றில் பேரின்பப் பெறுவாழ் வெய்தினானாமெனில் சிவராத்திரி தினத்தின் மகிமையை அறிய இதைவிடவேறு சான்று களும் நமக்கு வேண்டுமோ. ஒரு சிவராத்திரி தினத்திலே இந்த வில்வர்ச்சனை நிகழ்ந்தமையே வேடனுக்கு அப்போது அமைந்ததாகச் சிவபுராணம் கூறுகிறது.





சிவராத்திரி விரத முறை :
 
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?
சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.
அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.
சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.
இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்

           என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும். தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.
இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.  மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.
சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.  "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
 "நாமும் இந்த விரத்தை கடைபிடிப்போம் வாழ்வில் வாளமாய்  வாழ்வோம் "

தென்னாட்டுடைய சிவனே போற்றி!
 என்நா
ட்டவர்க்கும் இறைவா போற்றி!

Saturday, January 19, 2013

செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்




செண்பகவல்லி அம்மன் கோவிலில்  வருஷாபிஷேகம்



                                 தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு 7 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, 2012-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது. 

               அதனைத் தொடர்ந்து,  2013-ம் ஆண்டு ஜனவரி 18-ம் வெள்ளிக்கிழமை வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, புன்யாகவாசனம், தேவதா அனுக்ஞை, 1008 சங்கு பூஜை, 108 கலச பூஜை, முதல் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.











 
          வெள்ளிக்கிழமை  அதிகாலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 2-ம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்று,  அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு சாலை கோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகமும் தொடர்ந்து, மூலஸ்தான அம்பாள் சுவாமிக்கு கும்ப அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

















          இரவு சுவாமி - அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், உதவி ஆணையருமான செல்லத்துரை மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள் ஆகியோர் செய்தனர். திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் நாகஜோதி, நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம், தொழில் அதிபர்கள் திலகராஜ் ஆறுமுகம், இளங்கோமணி, கோவிந்தராஜன்,  டாக்டர் வேலுச்சாமி,  கட்டளைதாரர் கோவில்பட்டி வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!