ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா
"செண்பகவல்லியே சரணம் - கோயில்
பட்டியில் வாழ்வருள் சக்தியே சரணம்
பொன்மலைச் செல்வியே சரணம் - எழில்
பூவன நாதரின் தேவியே சரணம்"
திருமங்கைநகர், திருக்களாவனம், திருப்புனன்மலை, பொன்மலை, கோவிற்புரி, என்றெல்லாம் சிறப்பித்து கூறப்படும் கோவிற் பட்டி திருத்தலம் தூத்தக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புமிக்க திருதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை செண்பகவல்லி பூவனநாதருடன் அருளாட்சி செய்கின்றாள். இங்கு அன்னை செண்பகவல்லியின் அருள், காட்டாற்று வெள்ளம் போல் ஆனந்த வீச்சுடன் வெளிப்பட்டு, அன்னையின் பொற்பதம் பற்றிய அனைவரையும் தழைத்துச் செழிப்படையச் செய்கிறது கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் ஐப்பசித் திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்பாள் சந்நிதி நுழைவாயில் |
அம்பாள் சந்நிதி கொடிமரம் |
அம்பாள் சந்நிதி கொடிமரம் |
கோபுரமும் கொடிமரமும் |
கோபுரமும் கொடிமரமும் |
அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
காலை 5 மணிக்கு கொடிப் பட்டமானது மாட வீதி, ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் நந்தி, பலிபீடம் மற்றும் கொடி மரம் ஆகியவற்றுக்கு 18 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. கோவில் நிர்வாக அதிகாரி கசன்காத்த பெருமாள், முன்னாள் திருப்பணிக் குழுத் தலைவர் நாகஜோதி, ஜனக்கல்யாண் அமைப்பாளர் திருப்பதிராஜா, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், கோவில் தலைமை எழுத்தர் ராமலிங்கம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவின் 9-ம் திருநாளான நவம்பர் 7-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்பாள் திருவீதியுலாவும், மாலை 5 மணிக்கு மேல் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாணமும் நடைபெறும். பின்னர் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப் பிரவேசம் நடைபெறும். விழா நாள்களில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும்.
No comments:
Post a Comment