செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசாமி கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இக்கோயிலின் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. கொடியேற்றம் முதல் ஒவ்வொரு நாளும் புஷ்ப சப்பரம், பல்லக்கு, காமதேனு வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், கிளிவாகனம் ஆகியவற்றில் சுவாமி அம்மன் பவனி வந்தனர். ஒன்பதாம் திருநாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடந்தது.
அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் மற்றும் 18 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகமும் பூஜைகளும் நடத்தப்பட்டு காலை 7.15 மணிக்கு ரதாரோகணம் என்ற அம்மன் திருத்தேருக்கும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் ஆர்டிஓ ரவிச்சந்திரன் மற்றும் தாசில்தார் கந்தசாமி ஆகியோர் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து தேர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையில் நின்றது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ராமர், பீக்கிலிபட்டி முருகேசன் கோயில் நிர்வாக அதிகாரி இளையராஜா, வணிக வைசிய சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் பழனிகுமார், பொரு ளாளர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment