செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த மாதம் 30ம் தேதி தேரோட்டம் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னர் காலை 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், காலை 7 மணிக்கு உற்சவர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும், காலை 11 மணிக்கு தெப்பத்தில் தீர்த்தவாரி அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா, அறங்காவலர்குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் திருப்பதிராஜா, சுந்தரராஜ பெருமாள் கோயில் டிரஸ்ட் தலைவர் டாக்டர் கௌரிசங்கர், திருப்பணிக்குழு உறுப்பினர் மாரியப்பன், மண்டகபடிதாரர் முடுக்குமீண்டான்பட்டி ஆவுடையப்பன் செட்டியார் குடும்பத்தினர், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் மாரிமுத்து உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர்கள் திருப்பதிராஜா, ராமர், முருகேசன், ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment