செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து ராஜகோபுரம் இல்லாமலேயே இப்பகுதி மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வந்தது. இதன்காரணமாக செண்பகவல்லியம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் எழுப்ப வேண்டுமென்ற எண்ணமும், ஆவலும் மேலோங்கியது. இதன் வெளிப்பாடாக கடந்த 1999ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட தீர்மானிக்கப்பட்டு ராஜகோபுர திருப்பணிகள் துவங்கியது. தொடர்ந்து கோவில்பட்டி நகருக்கு அழகு சேர்க்கும் விதத்தில் தற்போது சுமார் 91அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 1989க்கு பின்னர் சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் (ஜன.29) மஹாகும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது."

Friday, July 15, 2016

கோயிலில் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்?

கோயில் என்பது மிகவும் புனிதமான இடம்.  ஆனால், இன்றைய நிலையில் ஆன்மிகம் என்பது... "இந்தக் கோவிலுக்குப் போனால் அது கிடைக்கும்; அந்தக் கோவிலுக்குப் போனால் இது கிடைக்கும்" என்று, மக்களைத் தூண்டுவதாக இருக்கிறது. 

வழிபாடும் நாம் வழிபடும் முறையும்


கோவில்களிலோ, கோஷ்ட தெய்வங்களின் திருவடிகளில், விரல்களின் நடுவில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்துவதும்;  கோவிலின் உள்ளே சன்னிதிகளில் எல்லாம் விழுந்து வணங்குவதும்; சண்டிகேஸ்வரரின் சன்னிதியில், வேட்டி - புடவை ஆகியவற்றில் இருந்து நூல்களைப் பிய்த்துப் போடுவதுமாக - வழிபாட்டு முறைகளும் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. 

பிரதோஷத்தன்றோ, நந்தியின் கழுத்தில் கையைப் போட்டு, கனகச்சிதமாக பக்தி வெளிப்படுகிறது. இவையெல்லாமே தவறு! கோவில் அர்ச்சகராக இருந்தாலும் பூஜை நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் விக்கிரகங்களைத் தொடக்கூடாது. 

இவையெல்லாம் ஆன்மிகம் அல்ல. ஏற்கனவே போட்டு வைத்த நல்ல வழி இருக்கும்போது, நாமாக ஏன் புதுப்புதுப் பாதைகளை உருவாக்கி, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? 

கோவிலுக்குச் செல்லும் போது செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், கோவிலின் உள்ளே செய்ய வேண்டியவைகளைப் பற்றியும், நமது ஆகம நூல்கள் விரிவாகவே கூறுகின்றன.
அவற்றை உணர வேண்டியது நமது கடமை. உணர்ந்து செயல்பட்டால்தான், பலன் கிடைக்கும். ஆனால்... இப்போது, உதாரணமாக - என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால், கைபேசிகளில் (செல் ஃபோன்களில்) சிம் (SIM) கார்டே போடாமல், பேச முயற்சிக்கிறோம். நடக்குமா? அதுபோல, ஆலயத்தில் நாம் செய்யவேண்டியவைகளைச் செய்தால்தானே பலன் கிடைக்கும்? கோவிலை நெருங்கியதும், கோபுரத்தின் அருகே (கீழே) நின்று, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். ஆனால் இந்த நியதி பெண்களுக்குப் பொருந்தாது. ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட வேண்டும். அதற்கு மேல் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிடக் கூடாது.
அடுத்து, கோவிலின் உள்ளே நுழைந்ததும், கொடி மரத்தின் அருகில் விழுந்து கும்பிட வேண்டும். கோவிலின் உள்ளே நாம் விழுந்து கும்பிட வேண்டிய இடம் இது ஒன்றுதான்.கொடிமரத்தைத் தாண்டி, உள்ளே உள்ள எந்தச் சன்னிதியிலும் விழுந்து கும்பிடக் கூடாது. அடுத்து, கொடிமரத்தைத் தாண்டியதும் பிராகார வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வரும்போது, அவசர அவசரமாக ரயிலைப் பிடிக்கும் அவசரத்தோடு வரக்கூடாது. இதற்கும் முன்னோர்கள் ஒரு வழிமுறையை வைத்திருக்கிறார்கள். அதாவது... நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண், கால்களில் விலங்கிட்டு, கைகளில் ஒரு பாத்திரம் நிறைய எண்ணெயுடன் நடந்து வரும்போது, சொட்டு கூடச் சிந்தாதபடி மெளனமாக நடந்து வருவதைப்போல, வலம் வர வேண்டுமாம்.
இதற்கு முக்கியமான காரணம்... கோவில் பிராகாரங்களில் குறுக்கும் நெடுக்குமாகக் கற்களைப் பாவியிருப்பார்கள்; பதித்திருப்பார்கள். அந்தக் கற்கள் சற்று சொரசொரப்பாக, சிறுசிறு முட்கள் கொண்டதைப் போல இருக்கும்.அக்கற்களின் மேல் கால்களைப் பதித்து மெள்ளமாக நடந்து வரும்போது, அக்கு பிரஷர் போல நரம்புகள் தூண்டப்பட்டு ஆரோக்கியம் கிடைக்கும்.இதன் காரணமாகவே, பிராகாரங்களில் மெள்ளமாக நடந்து வலம் வரவேண்டும் என்றார்கள். 

கோஷ்ட தெய்வங்களின் கால் விரல்களில் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தக் கூடாது. சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலர், வேட்டியில் இருந்தும் புடவையில் இருந்தும் நூல்களைப் பிய்த்து, சண்டிகேஸ்வரர் மீது போடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்களைக் கேட்டால், "இவ்வாறு செய்தால், புது ஆடை கிடைக்குமாம்" என்று பதில் வருகிறது. அது உண்மைதான்! ஒரு வேட்டியில் இருந்தோ புடவையில் இருந்தோ, தினந்தோறும் நூல் இழைகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தால், வேட்டியும் புடவையும் போய் விடும். புது ஆடை வாங்கித்தானே ஆகவேண்டும்? சண்டிகேஸ்வரர் சன்னிதியில், இன்னொரு கூத்தும் தினந்தோறும், அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்த்ததைப் போல, நூல் கிழித்துப் போடுவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம்... பலர், சண்டிகேஸ்வரர் சன்னிதியில் பலமாகக் கைகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் கேட்டால், "இது செவிட்டு சாமி சார்! இப்படிப் பலமாகக் கை தட்டினால்தான், இது விழித்துக் கொள்ளும்" என்று பதில் வருகிறது. நல்ல வேளை! யாராவது நன்கொடையாளர்களைப் பிடித்து (ஸ்பான்ஸர்), காத்து கேட்கும் கருவியை வாங்கிப் பொருத்தாமல் விட்டார்களே! 

பெரிய புராணத்தில் வரும் சண்டிகேஸ்வரர் வரலாற்றின்படி, சிவன் சன்னிதியில் அளிக்கப்படும் பிரசாதங்களை (விபூதி - குங்குமம் முதலானவற்றை) சண்டிகேஸ்வரர் சன்னிதியில் சமர்ப்பணம் செய்து, "தரிசனப் பலனைத் தந்தருளுங்கள்" என வேண்டி, அதன்பின் அவற்றை நாம் அணிய வேண்டும். 

இதெல்லாம் போக நமது திருக்கோவிலில் நடைபெறம் திருமண விழாக்களில் பேப்பர் வெடி போட்டு கோவிலையே குப்பையாக்கி விடுகிறோம். ஒரு கணம் நாம் என்ன செய்கிறோம் என்று சிந்திப்போம் அதை சரிசெய்வோம்.

திருசிற்றம்பலம்

Popular Posts

Example

நம: பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா!! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!